சுடச்சுட

    

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

    By DIN  |   Published on : 25th March 2017 04:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நிபுணர்கள் மூலம் விசாரணை நடத்தக்கோரி தொடுக்கப்பட்ட பொது நல மனு குறித்து பதில் கோரி, தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
    உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தல் முடிவுகள் வெளியானதும், உத்தரப் பிரதேசத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார். இதே குற்றச்சாட்டை தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலும் முன்வைத்தார்.
    இதனிடையே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நிபுணர்கள் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞர் எம்.எல். சர்மா என்பவர் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
    அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களிலும், மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இருக்கும் தொழில்நுட்பம் ரகசியமாக இருந்தால் மட்டுமே, அதில் மோசடி செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையமும் ஒப்புக் கொண்டுள்ளது.
    எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் அரசியல் கட்சிகள் தங்களது சுயநலத்துக்காக மோசடி செய்ய முடியுமா? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படியும், அந்த விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படியும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் திறன், அவற்றில் இருக்கும் தொழில்நுட்பம் போன்றவற்றை உரிய மின்னணுக் கூடம், விஞ்ஞானி, தொழில்நுட்ப நிபுணர் மூலம் பரிசோதிக்க வேண்டும். அதுதொடர்பான அறிக்கையையும், இந்த விவகாரத்தில் மேல்நடவடிக்கை எடுக்க வசதியாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
    இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எஸ்.கே. கௌல் ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
    அப்போது, அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து பதில் கோரி, தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால், பொது நல மனுவில் கோரப்பட்டிருப்பதுபோல், மத்திய அரசுக்கோ, பிற தரப்பினருக்கோ நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பவில்லை.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai