சுடச்சுட

    

    முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதிய விவகாரம்: நாடாளுமன்றத்துக்கு மட்டுமே முடிவு செய்யும் அதிகாரம் உள்ளது: மத்திய அரசு

    By DIN  |   Published on : 25th March 2017 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ananth-kumar

    முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியம் குறித்து முடிவு செய்யும் அதிகாரம், நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உண்டு என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    இந்த விவகாரம் குறித்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு பதிலளிக்கையில், மத்திய அரசு இவ்வாறு கூறியுள்ளது.
    இந்த விவகாரம் குறித்து மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர்கள் பேசியபோது, முன்னாள் எம்.பி.க்களில் 80 சதவீதம் பேர் பெரும் கோடீஸ்வரர்களாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பது குறித்து தங்களது ஆட்சேபணைகளைத் தெரிவித்தனர்.
    இதையடுத்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: எம்.பி.க்களுக்கு சலுகைகள், ஓய்வூதியம் வழங்குவது ஆகியவை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. நாடாளுமன்றத்துக்கு அளிக்கப்பட்ட பிரத்யேக உரிமை இதுவாகும். நாடாளுமன்றத்தின் புனிதத்தன்மையை எம்.பி.க்கள் அனைவரும் ஒப்புக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.
    இந்த விவகாரத்தில், மக்களவைத் தலைவருக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அனந்த் குமார்.
    முன்னதாக, மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வியாழக்கிழமை பேசியபோது, எம்.பி.க்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து நாடாளுமன்றம் மட்டுமே முடிவு செய்யும்; ஜனநாயக அமைப்புகள் பரஸ்பரம் பிற அமைப்புகள் விவகாரத்தில் தலையிடக் கூடாது. அவற்றின் அணுகுமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார்.
    பின்னணி: உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், ஓய்வூதியத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. இதை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு, தேர்தல் ஆணையம், மக்களவை மற்றும் மாநிலங்களவைச் செயலர்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai