சுடச்சுட

    
    ARJUN

    ரூ.5,000, ரூ.10,000 ஆகிய ரூபாய் நோட்டுகளை வெளியிடும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.
    நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மதிப்பிழப்பு செய்வது தொடர்பான முடிவை மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் எடுத்தது. இதையடுத்து, புதிய ரூ.500, ரூ.2,000 ஆகிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டது. இந்நிலையில், புதிதாக ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு ஆகும் செலவினத்தைக் குறைப்பதற்கு அதிக மதிப்புடைய ரூ.5,000, ரூ.10,000 ஆகிய ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிடும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
    இதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்திருக்கும் பதிலில், 'ரிசர்வ் வங்கியுடனான ஆலோசனையின்போது இதுகுறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. அப்போது ரூ.5,000, ரூ.10,000 ஆகிய ரூபாய் நோட்டுகளை தற்போது வெளியிடுவது சரியாக இருக்காது என்று முடிவெடுக்கப்பட்டது' எனத் தெரிவித்துள்ளார்.
    இதேபோல், முதலீட்டாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக பதில் தாக்கல் செய்துள்ளார். அதில் 'முதலீட்டாளர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் மத்திய அரசு சார்பில் 572 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது' எனத் தெரிவித்துள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai