சுடச்சுட

    

    அருண் ஜேட்லி தொடுத்த அவதூறு வழக்கு: கேஜரிவாலிடம் விசாரணை

    By DIN  |   Published on : 26th March 2017 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    aravind_kejerwal

    மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தொடுத்த அவதூறு வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் 5 பேரை விசாரணைக்கு உட்படுத்தி தில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
    தில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதவி வகித்த காலகட்டத்தில் அங்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டினார். இதே குற்றச்சாட்டை முன்வைத்து அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களான ஆசுதோஷ், குமார் விஸ்வாஸ், சஞ்சய் சிங், ராகவ் சத்தா, தீபக் வாஜ்பாய் ஆகியோரும் கருத்து தெரிவித்தனர்.
    கேஜரிவால் உள்ளிட்ட மேற்கண்ட தலைவர்கள் தெரிவித்த கருத்தால் தனது புகழுக்குக் களங்கம் ஏற்பட்டு விட்டதாகக் கூறி, அவர்கள் மீது தில்லி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அருண் ஜேட்லி கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் குற்றவியல் அவதூறு வழக்கைத் தொடர்ந்தார்.
    இந்த வழக்கு மீதான விசாரணை தலைமை பெருநகர நீதிபதி சுமித் தாஸ் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை காலையில் இவ்வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியபோது, கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 5 தலைவர்களும் நேரில் ஆஜராகியிருந்தனர். எனினும், புகார்தாரரான அருண் ஜேட்லி ஆஜராகவில்லை. இது தொடர்பாக இரு தரப்பு வழக்குரைஞர்களிடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது.
    அப்போது, கேஜரிவால் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் தங்களுக்கு தீவிரமான முறையில் அச்சுறுத்தல் வருவதாகத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைத் தவிர மற்ற அனைவரையும் நீதிமன்றத்தை விட்டு வெளியேறுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
    அதைத் தொடர்ந்து, கேஜரிவால் உள்ளிட்ட 6 பேருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். அப்போது, இந்த வழக்கில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்றும், வழக்கு விசாரணையைச் சந்திக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் நீதிபதி முன் தெரிவித்தனர். இதையடுத்து, இவ்வழக்கு விசாரணை வரும் மே 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
    இதனிடையே, தமக்கு எதிராக கேஜரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் தெரிவித்த கருத்துக்காக ரூ.10 கோடி இழப்பீடு கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் மற்றொரு அவதூறு வழக்கை அருண் ஜேட்லி ஏற்கெனவே தொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai