Enable Javscript for better performance
உ.பி.யில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதும் முதல்வர் இல்லத்தை கங்கை நீரால் சுத்திகரிப்போம்: அகிலேஷ்- Dinamani

சுடச்சுட

    

    உ.பி.யில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதும் முதல்வர் இல்லத்தை கங்கை நீரால் சுத்திகரிப்போம்: அகிலேஷ் யாதவ்

    By DIN  |   Published on : 26th March 2017 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    AkhileshYadav

    "உத்தரப் பிரதேசத்தில் வரும் 2022-இல் நாம் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் இல்லத்தில் தீயணைப்பு வீரர்கள் மூலம் கங்கை நீரைத் தெளித்து சுத்திகரிப்போம்' என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கிண்டலாகத் தெரிவித்தார்.

    உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியான சமாஜவாதிக் கட்சி தோல்வியைத் தழுவியது. இதையடுத்து, லக்னௌவில், "5, காளிதாஸ் மார்க்' என்ற முகவரியைக் கொண்ட முதல்வரின் அதிகாரபூர்வ இல்லத்தை அகிலேஷ் யாதவ் காலி செய்தார்.
    அதைத் தொடர்ந்து அந்த இல்லத்தில் துறவிகளும், மதகுருமார்களும் புனிதப்படுத்தும் சடங்குகளை மேற்கொண்டனர். எனினும், அந்த இல்லத்தில் யோகி ஆதித்யநாத் இன்னும் குடியேறவில்லை. அவர் தற்போது லக்னௌவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். அவர் அடுத்த வாரம் தொடங்கவுள்ள "நவராத்ரா' பண்டிகையின்போது முதல்வருக்கான அதிகாரபூர்வ இல்லத்தில் குடியேறுவார் என்று கூறப்படுகிறது.
    இந்நிலையில், சமாஜவாதி கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் லக்னௌவில்
    சனிக்கிழமை நடைபெற்றது. அதில், புதிய முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மறைமுகமாகச் சாடும் வகையில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
    மாநிலத்தில் நாம் (சமாஜவாதிக் கட்சி) வரும் 2022-ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வருவோம். அப்போது கங்கை நீரை தீயணைப்பு வீரர்கள் மூலம் கொண்டு வந்து, முதல்வர் இல்லத்தில் தெளிக்க வைப்போம். அவ்வாறு அந்த இல்லத்தைச் சுத்திகரிப்பதில் நமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அதேவேளையில், அங்குள்ள 3 மயில்கள் நல்லவிதமாக கவனித்துக் கொள்ளப்படும் என்று நம்புகிறோம் என்றார் அகிலேஷ் யாதவ்.
    "அவரது இந்தக் கருத்து அநாகரீகமானது' என்று பாஜக விமர்சித்துள்ளது. அகிலேஷின் அணுகுமுறை குறித்தும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
    சட்டம்-ஒழுங்கு நிலை: இதனிடையே, அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
    என்னை விட தமக்கு ஒரு வயது அதிகம் என்று யோகி ஆதித்யநாத் கூறியது குறித்து கேட்கிறீர்கள். அவர் என்னை விட ஒரு வயது மூத்தவர்தான். ஆனால், பணி விஷயத்தில் என்னுடன் ஒப்பிட்டால், அவர் மிகவும் பின்தங்கியுள்ளது தெரிய வரும்.
    எனது ஆட்சிக் காலத்தில் சட்டம்-ஒழுங்கு மோசம் என்று ஊடகங்கள் சித்திரித்து வந்தன. அப்போது பாலியல் பலாத்காரம், கொலை போன்றவை நிகழும்போது எனது படங்களை ஊடகங்கள் காட்டுவது வழக்கம். அதேபோல், இதுபோன்ற சம்பவங்கள் குறித்து இனி செய்தி வெளியிடும்போது ஆதித்யநாத்தின் படங்களை ஊடகங்கள் காட்டும் என்று நான் காத்திருக்கிறேன்.
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக எழுத்துள்ள புகார்கள் விசாரிக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியுடனான எங்கள் கூட்டணி தொடரும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai