Enable Javscript for better performance
செல்லிடப் பேசி இணைப்புக்கு ஆதார் கட்டாயம்: தொலைத் தொடர்புத் துறை உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    செல்லிடப் பேசி இணைப்புக்கு ஆதார் கட்டாயம்: தொலைத் தொடர்புத் துறை உத்தரவு

    By DIN  |   Published on : 26th March 2017 04:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    telecommunication

    செல்லிடப் பேசி இணைப்பு வைத்திருக்கும் சந்தாதாரர்களிடம் இருந்து ஆதார் எண்ணை கட்டாயம் பெற வேண்டும் என்று தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
    உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், பாதுகாப்புக் காரணங்களை சுட்டிக்காட்டி, நாடு முழுவதும் தற்போது செல்லிடப் பேசிகளை பயன்படுத்தி வரும் சந்தாதாரர்களிடம் இருந்து ஆதாரை அடிப்படையாகக் கொண்ட கேஒய்சி விவரங்களை (பெயர், முகவரி, வயது) ஓராண்டுக்குள் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
    இதுதொடர்பாக தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுடன் மத்திய தொலைத் தொடர்புத் துறை ஆலோசனை நடத்தியது. இதேபோல், ஆதார் விவரங்களை பராமரிக்கும் இந்திய தனித்துவ அடையாளம் ஆணைய (யுஐடிஏஐ) பிரதிநிதிகள், தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், பிரதமர் அலுவலகம் ஆகியவை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவது என்று முடிவு செய்தன.
    இந்நிலையில், மத்தியத் தொலைத் தொடர்பு துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
    செல்லிடப் பேசி இணைப்புகளை வைத்திருக்கும் அனைத்து சந்தாதாரர்களின் அடையாளம், முகவரியை சரிபார்க்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, சந்தாதாரர்கள் புதிய செல்லிடப் பேசி இணைப்பை பெறவும், பழைய செல்லிடப் பேசி எண்ணை சந்தாதாரர்கள் தொடர்ந்து பயன்படுத்தவும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செல்லிடப் பேசி சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் மத்தியத் தொலைத் தொடர்புத் துறை குறிப்பு அனுப்பியுள்ளது.
    அந்த குறிப்பில், பத்திரிகை மற்றும் ஊடக விளம்பரங்கள் மூலமாகவும், குறுந்தகவல் மூலமும் சந்தாதாரர்களின் முகவரி, அடையாளம் உள்ளிட்ட விவரங்களை மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவை செல்லிடப் பேசி நிறுவனங்கள் தெரியப்படுத்த வேண்டும்; தங்களது இணையதளங்களிலும் இதுதொடர்பான விவரங்களை செல்லிடப் பேசி நிறுவனங்கள் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
    ஆதார் விவரங்களை சந்தாதாரர்களிடம் இருந்து பெறும்போது, நீண்ட கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் தகுந்த நடைமுறைகளையும், சந்தாதாரர்கள் பரஸ்பரம் ஏற்கக்கூடிய பொதுவான நடைமுறைகளையும் அனைத்து தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று மத்தியத் தொலைத் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai