Enable Javscript for better performance
திருப்பதி தேவஸ்தானத்திடம் ரூ.50 கோடி பழைய நோட்டுகள்- Dinamani

சுடச்சுட

    

    திருமலை தேவஸ்தானம் இனி பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    கடந்த நவம்பர் 9-ஆம் தேதி மத்திய அரசு பழைய ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரத்து செய்யப்பட்ட நோட்டுகளை மாற்றிக்கொள்ள டிசம்பர் 30-ஆம் தேதி வரை காலக்கெடு விதித்தது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில், பக்தர்கள் ரத்து செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை அதிகளவில் காணிக்கையாகச் செலுத்தி வந்தனர். அவற்றை டிசம்பர் 30-ஆம் தேதி வரை வங்கிகள் பெற்றுக்கொண்டு, புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி அளித்தன.
    இந்நிலையில், காலக்கெடுவுக்குப் பிறகும் ஏழுமலையான் கோயில் உண்டியலில் பக்தர்கள் பழைய ரூபாய் நோட்டுகளை செலுத்தி வந்தனர். அவற்றை மாற்றித்தருமாறு தேவஸ்தானம் கடந்த மாதம் மத்திய ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியது. ஆனால் இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஏதும் பதிலளிக்காத நிலையில், இதுகுறித்து ஆந்திர மாநில எம்.பி. மிதுன்ரெட்டி வெள்ளிக்கிழமை மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மக்களவையில் எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வணிக மற்றும் வியாபார நிறுவனங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்வதில்லை என்பதால், ரத்து செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை மக்கள் தேவஸ்தான உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அவற்றை மாற்றித்தர வேண்டும் என தேவஸ்தானம் ரிசர்வ் வங்கியை அணுகியது. அதற்கு தற்போதுள்ள வங்கிச் சட்டம் 2017-இன் படி, டிசம்பர் 30-ஆம் தேதிக்குப் பிறகு பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியாது என ஆர்பிஐ திட்டவட்டமாக கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    இதனால் தேவஸ்தானத்திடம் தற்போது நிலுவையில் உள்ள சுமார் ரூ. 50 கோடி வரையிலான பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியாத நிலை தேவஸ்தானத்துக்கு ஏற்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai