சுடச்சுட

  

  தில்லி மாநகராட்சித் தேர்தல்: பாஜகவின் வெற்றிக்குப் பாடுபடுமாறு தொண்டர்களுக்கு அமித் ஷா அறிவுரை

  By DIN  |   Published on : 26th March 2017 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Amit-Shah

  தில்லி மாநகராட்சித் தேர்தலில் பாஜகவின் வெற்றியை உறுதிசெய்ய வேண்டும் என்று பாஜக தொண்டர்களை கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.
  தில்லியி மாநகராட்சித் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுவதையொட்டி, தில்லி ராம் லீலா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
  கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு தில்லி, பிகார் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் பாஜக வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது தில்லியில் நடைபெறவுள்ள மாநகராட்சித் தேர்தலிலும் பாஜகவின் வெற்றிக்கு கட்சித் தொண்டர்கள் பாடுபட வேண்டும். தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், அரசியல் காரணங்களுக்காக, பிரதமர் மோடியுடன் மோதல் போக்கைக் கடைபிடித்து வருகிறார்.
  மிகக் குறுகிய காலத்திலேயே ஆம் ஆத்மி அரசின் ஆட்சியில் வெங்காயம் கொள்முதல், தண்ணீர் டேங்கர் லாரிகள், தெரு விளக்குகள் ஆகியவற்றை வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. பணி நியமனங்களிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.
  குஜராத், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் விளம்பரப் பதாகைகள் வைத்ததில் தில்லி அரசின் பணம் வீணானது.
  கேஜரிவாலின் முதன்மைச் செயலர், சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.
  ஆம் ஆத்மி அரசின் பல அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் பாலியல் பலாத்காரம், ஊழல் புகார்கள் ஆகியவற்றில் சிக்கி கைதாகியுள்ளனர். துணிவிருந்தால், அவர்கள் மீது கேஜரிவால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  தில்லியில் அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியைத் தோற்கடிப்பதற்கு, தற்போது நடைபெறவுள்ள மாநகராட்சித் தேர்தல் ஒரு வாய்ப்பாகும். எனவே, தில்லி மாநகராட்சித் தேர்தலில் பாஜகவின் வெற்றியை கட்சித் தொண்டர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று அமித் ஷா கூறினார்.
  தொடந்து, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
  மத்தியில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி), அம்ருத் திட்டம் ஆகியவற்றின் மூலமாக, ஒவ்வொரு நகரத்தின் வளர்ச்சியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசுடன் இணைந்து தில்லியை மேம்படுத்த ஆளும் ஆம் ஆத்மி அரசு தயாராக இல்லாததால், தில்லி வளர்ச்சியில் பின் தங்கிவிட்டது.
  உத்தரப் பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களைப் போலவே, குஜராத்திலும் ஆம் ஆத்மிக்கு தோல்வியே கிடைக்கும். எனவே, அடுத்த மாதம் நடைபெறவுள்ள தில்லி மாநகராட்சித் தேர்தலில் பாஜகவை வெற்றிபெறச் செய்து, வளர்ச்சிக்காக பாடுபடும் பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai