சுடச்சுட

    

    மகாராஷ்டிரத்தில் நோயாளிகளின் உறவினர்களால் மருத்துவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவங்களைக் கண்டித்து கடந்த 5 நாள்களாக மேற்கொண்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை பயிற்சி மருத்துவர்கள் சனிக்கிழமை திரும்பப் பெற்றுக் கொண்டு பணிக்கு திரும்பினர்.
    மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸýம், மும்பை உயர் நீதிமன்றமும் விடுத்த எச்சரிக்கையின் எதிரொலியாகவே வேலைநிறுத்தப் போராட்டத்தை மருத்துவர்கள் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
    முன்னதாக, துலே என்னுமிடத்தில் மருத்துவர் ஒருவர் நோயாளியின் உறவினர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் உள்பட மகாராஷ்டிரத்தின் பல்வேறு இடங்களிலும் நோயாளிகளின் உறவினர்களால் மருத்துவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கடந்த திங்கள்கிழமை முதல் 4,500 பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு அகில இந்திய மருத்துவ சங்கமும் ஆதரவு அளித்தது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால், மகாராஷ்டிரத்தில் அரசு பொது மருத்துவமனைகளில் 5 நாள்களாக வழக்கமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் கடும் துன்பத்துக்கு ஆளாகினர்.
    இதைத் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களுக்கு முதல்வர் ஃபட்னவீஸ் வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக மகாராஷ்டிர சட்டப் பேரவையில் அவர் பேசுகையில், "மருத்துவர்கள் வேலைக்கு உடனடியாக திரும்ப வேண்டும். இல்லையெனில், அரசு அமைதியாக இருக்காது. மருத்துவமனைகளில் நோயாளிகள் உயிரிழப்பதை அனுமதிக்க முடியாது' என்றார்.
    மும்பை உயர் நீதிமன்றமும், "வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் சனிக்கிழமை காலை 8 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும்; இல்லையெனில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தின் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்' என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பயிற்சி மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அளித்த ஆதரவை அகில இந்திய மருத்துவ சங்கம் வெள்ளிக்கிழமை மாலை உடனடியாக திரும்பப் பெற்றுக் கொண்டது. எனினும், பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
    இதனிடையே, இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாத மகாராஷ்டிர மாநில பயிற்சி மருத்துவர்கள் சங்கத்தினர் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸýடன் வெள்ளிக்கிழமை இரவு பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அந்தச் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "முதல்வருடனான சந்திப்பு திருப்தியளித்தது; மருத்துவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என்று மாநில அரசு வாக்குறுதிகள் அளித்துள்ளது. எனவே, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்கள் சனிக்கிழமை முதல் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
    இதேபோல், மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் 1,100 பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள். இதில் மும்பை மருத்துவமனைகளில் மட்டும் 500 போலீஸார் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதிக்குள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இதேபோல், புணே, நாகபுரி, ஒளரங்காபாத் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் ஏப்ரல் மாத இறுதிக்குள் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்படுவர்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
    இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரம் முழுவதும் கடந்த 5 நாள்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்பினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai