Enable Javscript for better performance
ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது: கட்சி நிர்வாகிகளுக்கு உ.பி. முதல்வர் அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது: கட்சி நிர்வாகிகளுக்கு உ.பி. முதல்வர் அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 27th March 2017 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    YOGI

    பாஜகவில் கட்சிப் பதவியில் இருப்பவர்களும், மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்களும் எவ்வித ஒப்பந்தப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.

    அரசு ஒப்பந்தப் பணிகளை அரசியல் கட்சியினர் மேற்கொள்வதுதான் முறைகேடுகளுக்கும், ஊழலுக்கும் முக்கியக் காரணமாக அமைகிறது என்பதால் அவர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
    தனது சொந்தத் தொகுதியான கோரக்பூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் ஆதித்யநாத் பொதுமக்கள், கட்சியினர் மத்தியில் ஞாயிற்றுக்கிழமை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
    தேர்தல் வெற்றியை பெற்றுள்ளதை அடுத்து நாம் நிறைவேற்றுவதற்காக ஏராளமான பணிகள் காத்திருக்கின்றன. மக்கள் என்னிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை வைத்துள்ளனர். அதனை நிறைவேற்ற வேண்டியது எனது கடமை.
    மாநிலத்தில் பாஜகவில் கட்சிப் பதவியில் இருப்பவர்களும், மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்களும் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டிய நேரம் இது. கட்சிப் பதவி வகிப்பவர்களும், மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்களும் எவ்வித ஒப்பந்தப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது. அதே நேரத்தில் அந்தப் பணிகள் முறையாக நடைபெறுகின்றனவா? என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
    இதுவரை எம்.பி.யாக இருந்த நான், இப்போது முதல்வராகப் பதவியேற்றுள்ளேன். இதன் மூலம் பொதுமக்களுக்காக கூடுதல் பொறுப்புணர்வுடன் பணியாற்ற வேண்டிய பணி எனக்கு வழங்கப்பட்டுள்ளது. பாஜக எந்த அளவுக்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதோ, அந்த அளவுக்கு ஆட்சி சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் வைத்துள்ளனர்.
    அடுத்து வரும் நாள்களில் மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் அனைத்தும் சிறிதும் குறைவின்றி மக்களைச் சென்றடைய வேண்டும்.
    உத்தரப் பிரதேசம் குறித்து தேசிய அளவில் இருந்து வரும் எதிர்மறையான கருத்தை மாற்ற வேண்டும். இதற்கு மக்கள் எனக்கு உதவ வேண்டும். மாநிலத்தை சுத்தம் செய்யும் பணி எனக்குக் கிடைத்துள்ளது. அடுத்த இரு மாதத்தில் மாற்றத்தை மக்கள் உணரத் தொடங்குவார்கள். அமைச்சர்கள் அனைவரும் மக்கள் எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும். அரசு அலுவலகங்கள் அனைத்தும் மக்களுக்காக சேவையாற்ற காத்திருக்க வேண்டும் என்றார் யோகி ஆதித்யநாத்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai