Enable Javscript for better performance
கருத்துத் திணிப்பில் ஈடுபடாத பாரம்பரியம் உடையது இந்தியா: பிரதமர் மோடி- Dinamani

சுடச்சுட

  

  கருத்துத் திணிப்பில் ஈடுபடாத பாரம்பரியம் உடையது இந்தியா: பிரதமர் மோடி

  By DIN  |   Published on : 27th March 2017 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi

  யார் மீதும் தனது கருத்துகளைத் திணிக்காத சிறந்த பாரம்பரியத்தை உடையது இந்தியா என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
  ராஜஸ்தான் மாநிலம் மெளண்ட் அபுவில் பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் காணொளிக் காட்சி மூலம் அவர் பேசியதாவது:
  கடவுள் ஒருவரே என்பதுதான் இந்தியப் பாரம்பரியத்தின் மையக்கருத்தாகும். இந்தியாவில் ஹிந்து, முஸ்லிம், பார்ஸி என பல்வேறு மதத்தினரின் கடவுள் வெவ்வேறானவர்கள் அல்ல. மக்கள் வெவ்வேறு வழிகளில் ஒரே கடவுளை வழிபடுகிறார்கள் என்பதுதான் உண்மை.
  தனது கருத்துகளை யார் மீதும் திணிக்காத சிறந்த பாரம்பரியத்தை உடைய நாடு இந்தியா. ஞானத்துக்கு எல்லையும், காலமும், மொழி, மத, இன வேறுபாடுகளும் கிடையாது என்பதில் இந்தியர்கள் மிகுந்த நம்பிக்கையுள்ளவர்கள்.
  நெடுங்காலமாக இயற்கையைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையுள்ளது நமது நாடு. இப்போதும் கூட சூரிய மின்சக்தி திட்டம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க வளங்களில் இருந்து சக்தியைப் பெற மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. 2020-ஆம் ஆண்டில் நாம் 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது புதுப்பிக்கத்தக்க வளங்களில் இருந்து 175 ஜிகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனைப் பெற்றிருப்போம்.
  கருப்புப் பணத்தை ஒழிக்கும் முக்கிய நடவடிக்கையாகத்தான் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் முடிவு எடுக்கப்பட்டது. மின்னணுப் பணப்பரிமாற்றத்தை அதிகரித்து, ரொக்கமாக பணம் கையாளப்படுவதைக் குறைக்க முழுவீச்சில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கருப்புப் பணம் உருவாவது பெருமளவில் தடுக்கப்படும்.
  இதுபோன்ற அரசின் நடவடிக்கைகளுக்கும், குழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் கொடுக்கும் நடவடிக்கைகளுக்கும் பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஆதரவு அரசுக்குத் தேவை. ஏனெனில், இங்கு லட்சக்கணக்கான உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் மூலம் மக்கள் மத்தியில் சிறப்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்றார் அவர்.
  அதே நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்ட மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன், "யோகாசனத்தை அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயமாகக் கற்றுத் தர வேண்டும். இதன் மூலம் மாணவர்களின் ஆளுமை அதிகரிப்பது முதல் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்' என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai