சுடச்சுட

  

  காசநோய்க்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவர்களுக்கு ஊக்கத் தொகை: மத்திய அரசு திட்டம்

  Published on : 27th March 2017 04:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  injection

  காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு ஊக்கத் தொகை அளிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  இந்தியா, இந்தோனேசியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 6 நாடுகளில் கடந்த 2015-ஆம் ஆண்டில் காசநோய்க்கு 18 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் காசநோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையுடன் இதை ஒப்பிடும்போது 60 சதவீதம் ஆகும். இந்தியாவில் கடந்த 2016-ஆம் ஆண்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 17.5 லட்சம் பேர் காசநோய்க்கு சிகிச்சை எடுத்துள்ளனர். மேலும், 33,820 பேர் போதைப் பொருளால் காசநோயின் தாக்கத்துக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமன்றி, இந்தியாவில் மட்டும் காசநோயால் பாதிக்கப்பட்டு நாள்தோறும் 1,400 பேர் உயிரிழப்பதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.
  இதைத் தொடர்ந்து, இந்தியாவில் காசநோயை முழுவதும் அகற்றும் நோக்கத்துடன் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதொடர்பான தேசிய வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
  காசநோய்க்கு தனியார் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதை ஊக்கமளிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்பட வேண்டும். இந்தியாவில் காசநோய் கவனிப்புத் தொடர்பான அளவுகோலின்படி, காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வரும் தனியார் மருத்துவர்களுக்கு ரூ.250 ஊக்கத் தொகை அளிக்கப்பட வேண்டும். பிறகு மாதந்தோறும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ரூ.250-ம், காசநோய் தொடர்பான அனைத்து சிகிச்சைகளையும் நிறைவு செய்வதற்கு ரூ.500-ம் அளிக்க வேண்டும். போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட காசநோய் நோயாளிகள் குறித்து கவனத்துக்கு கொண்டு வருதல், அவர்களுக்கு 6 முதல் 9 மாதங்களுக்கு சிகிச்சை அளித்தல் ஆகியவைகளுக்காக ரூ.2,750 ஊக்கத் தொகை வழங்க வேண்டும். இதே நோயாளிகளுக்கு 24 மாதங்களுக்கும் அதிகமான காலத்தில் சிகிச்சை அளித்தால் ரூ.6,750 ஊக்கத் தொகை வழங்கப்பட வேண்டும்.
  தனியாரிடம் சிகிச்சைக்கு செல்லும் காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவச மருந்துப் பொருள்கள் அளிப்பது தொடர்பான திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சகம் தயாரிக்க வேண்டும். இதேபோல், காசநோய்க்கு சிகிச்சை எடுப்பதற்கு போதிய நிதிவசதியின்மை, நோயாளிகளின் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, ஒவ்வொரு நோயாளிக்கும் நேரடி மானியத் திட்டத்தின்மூலம், ரூ.2,000 வழங்க வேண்டும் என்று அந்த வரைவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  இந்த வரைவு திட்டம், நாடு முழுவதும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து தில்லியில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா பேசியபோது, அந்த திட்டம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai