சுடச்சுட

  

  மக்கள் பங்களிப்புடன் புதிய இந்தியா: பிரதமர் மோடி வலியுறுத்தல்

  Published on : 27th March 2017 09:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi1

  மக்கள் பங்களிப்புடன் புதிய இந்தியா உருவாக வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
  கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் நாட்டு மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
  இதுதொடர்பாக அகில இந்திய வானொலியின் "மனதின் குரல்' (மன் கீ பாத்) நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய உரை வருமாறு:
  தற்போது நாம் 21-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த சூழ்நிலையில், இந்தியா மாற வேண்டும் என்று விரும்பாத இந்தியர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த மாற்றத்தில் தங்களது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று விரும்பாத இந்தியர்களும் இருக்க முடியாது. மாற்றம் தொடர்பான 125 கோடி மக்களின் விருப்பம்தான், புதிய இந்தியாவுக்கு அடித்தளமிட்டுள்ளது.
  புதிய இந்தியா என்பது அரசு திட்டமோ அல்லது அரசியல் கட்சியின் நிகழ்ச்சியோ கிடையாது. 125 கோடி மக்களின் முழக்கமே, புதிய இந்தியா ஆகும். இதன் சாராம்சம், நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தங்களது பணிகள், பொறுப்புகளை முறைப்படி செய்ய வேண்டும் என்பதே ஆகும். 125 கோடி இந்தியர்களும், புதிய இந்தியாவை உருவாக்க உறுதிமொழி எடுத்துக் கொள்வதுடன், அதற்காக அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். அப்படி செய்தால், புதிய இந்தியாவை உருவாக்குவது தொடர்பான மக்களின் கனவு நிச்சயம் சாத்தியமாகும்.
  நாட்டு மக்களே, கருப்புப் பணம், ஊழல் ஆகியவைகளுக்கு எதிரான நமது போராட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். நாடு முழுவதும் உள்ள 125 கோடி மக்களும், இந்த ஆண்டில் 2,500 கோடிகளுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்ய முடியுமா? இதுதொடர்பாக மத்திய பட்ஜெட்டில் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாட்டு மக்கள் விரும்பினால், இந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு ஓராண்டு காலம் தேவைப்படாது; 6 மாதங்களில் இதை செய்து விட முடியும். இதை செய்ய ரொக்கப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கைகள் குறைவதை உறுதி செய்வதற்கு நாட்டு மக்கள் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும்.
  தங்களது குழந்தைகளுக்கான கல்வி கட்டணம், மருந்துப் பொருள்கள் அல்லது கடைகளில் வீட்டு மளிகை சாமான்கள், விமானம், ரயில் டிக்கெட் கட்டணம் ஆகியவைகளுக்கு டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்த வேண்டும். டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்வதை நாட்டு மக்கள் தங்களது அன்றாட பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
  கடந்த சில மாதங்களில், டிஜிட்டல் பரிவர்த்தனை, "டிஜிதன்' இயக்கத்தில் நாட்டு மக்கள் அதிகமானோர் பங்கேற்றதை காண முடிந்தது. இதேபோல், மக்களிடையே ரொக்கமில்லா பரிவர்த்தனை குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அதிகரித்துள்ளது. ஏழைகள் கூட டிஜிட்டல் பரிவர்த்தனை குறித்து அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டனர். ரொக்கமில்லா பரிவர்த்தனை வர்த்தகத்துக்கு மக்கள் படிப்படியாக மாறிக் கொண்டு வருகின்றனர். உயர்மதிப்பு ரூபாய் மதிப்பிழப்பு முடிவு எடுக்கப்பட்ட பிறகு, டிஜிட்டல் பரிவர்த்தனையின் பல்வேறு நிலைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
  "பீம்' செயலி (ஆஃப்) வெளியிட்டு இரண்டரை மாத காலத்தில், சுமார் ஒன்றரை கோடி மக்கள், அந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அந்த பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும் நாடு முழுவதும் 100 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 80 முதல் 85 நிகழ்ச்சிகள் ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. இதேபோல், பரிசு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. இத்திட்டத்தில் 12.5 லட்சம் பேர் பரிசுகளை வென்றுள்ளனர். 70 ஆயிரம் வணிகர்களும் பரிசு பெற்றுள்ளனர்.
  பணிபுரியும் மகளிருக்கு பேறுகால விடுப்பு நாள்கள் அதிகரிப்பு: இந்தியாவில் பணிபுரியும் பெண்களுக்கு பேறுகாலத்துக்கு ஊதியத்துடன் அளிக்கப்பட்ட விடுமுறையை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உலகில் 2 அல்லது 3 நாடுகளில்தான் இந்தியாவை விட அதிக நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்படுகிறது. நமது எதிர்கால சந்ததியான, பிறக்கும் குழந்தை, ஒவ்வொரு நிமிடமும், நல்ல முறையில் கவனிக்கப்படுவதை உறுதி செய்வதே மத்திய அரசு இந்த முடிவை எடுத்ததன் முக்கிய நோக்கம் என்று பிரதமர் மோடி கூறினார்.
  மனதின் குரல் நிகழ்ச்சியில், வங்கதேசத்தின் சுதந்திரம், தூய்மை இந்தியா திட்டம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் தேர்வுகள், யோகா, மன அழுத்தம் உள்ளிட்டவை குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.
  உணவுப் பொருள்களை வீணாக்குவது, ஏழைகளுக்கு நாம் இழைக்கும் அநீதி என்றும், ஆதலால் நாட்டு மக்கள் உணவுப் பொருள்களை வீணாக்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai