சுடச்சுட

    

    'மாநிலங்கள் இடையிலான நதி நீர் திருத்த மசோதா' நாடாளுமன்றத்தில் எதிர்க்குமா தமிழகம்?

    By -எம்.ஏ. பரணி தரன்  |   Published on : 27th March 2017 04:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    umabharti

    மக்களவையில் கடந்த 15-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ள "மாநிலங்கள் இடையிலான நதி நீர் வழக்காடுதல் சட்டத் திருத்த மசோதா - 2017', கர்நாடகத்துக்கு சாதகமான அம்சங்கள் பலவற்றுடன் இருப்பதாகக் கருதப்படுகிறது.

    இதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை, மாநிலங்களவையில் இம்மசோதாவின் அம்சங்களுக்கு
    எதிர்ப்புத் தெரிவித்து குரல் கொடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் நோக்கர்களிடையே எழுந்துள்ளது.

     

    மசோதா அறிமுகம்

    இந்த மசோதா மத்திய நீர் வளத் துறை அமைச்சர் உமா பாரதியால் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் உமா பாரதி, "காவிரி, ரவி -பியாஸ் நதி நீர்ப் பங்கீடு விவகாரங்களில் அவை தொடர்புடைய தீர்ப்பாயங்கள் 26 முதல் 30 ஆண்டுகள் வரை
    செயல்பட்டன. அவற்றால் வெற்றிகரமான தீர்ப்பை வழங்க முடியவில்லை.
    தீர்ப்பாயங்கள் எவ்வளவு கால வரம்புக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றோ தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிகளை வகிப்போருக்கு வயது உச்சவரம்பு எவ்வளவு என்பதையோ 1956-இல் கொண்டு வரப்பட்ட மாநிலங்கள் இடையிலான நதி நீர் வழக்காடுதல் சட்டம் தெளிவுபடுத்தவில்லை. இவற்றை முறைப்படுத்தும் அம்சங்கள் திருத்த மசோதாவில் உள்ளன' என்றார்.
    இந்நிலையில், மத்திய அரசு தயாரித்துள்ள பன்னிரண்டு பக்க திருத்த மசோதா அடங்கிய ஆறு பக்கங்களில் மொத்தம்
    ஒன்பது அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் சில அம்சங்கள், தற்போது இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள காவிரி விவகாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அறியப்படுகிறது.


    பிரச்னை என்ன?

    குறிப்பாக, மாநிலங்கள் இடையிலான நதி நீர் வழக்காடுதல் சட்டத் திருத்த மசோதாவின் 3-ஆவது விதியில் 4-ஆவது உள்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதில் "மாநிலங்கள் இடையிலான நதி நீர் வழக்காடுதல் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டதும் நாட்டில் இதுவரை அமலில் உள்ள அனைத்து தீர்ப்பாயங்களும் கலைக்கப்படும். அவை விசாரித்து வந்த அனைத்து வழக்குகளும் திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் அமையும் தீர்ப்பாயத்துக்கு மாற்றப்படும்.
    மற்றொரு உள்பிரிவில், புதிய தீர்ப்பாயம் தொடங்கும் நாளுக்கு முன்பாக, நீர்ப் பங்கீடு வழக்குகளில் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தால் அந்த வழக்கு திரும்ப விசாரிக்கப்படாது' என குறிப்பிடப்பட்டுள்ளது.
    இந்த உள்பிரிவுகள், ஏற்கெனவே அமலில் உள்ள சட்டத்தின் 4-ஆவது விதி மற்றும் அதன் உள்பிரிவுகளுக்கு மாற்றாக புதிய சட்டத் திருத்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன.
    இதேபோல, தீர்ப்பாயம் அளிக்கும் உத்தரவு அல்லது தீர்ப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் முறையிட விரும்பினால் அதற்கென வழக்காடுதல் தீர்வை குழு அமைக்கப்படும் என்று விதி 3(4ஏ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    புதிய மசோதாவின்படி, மாநிலங்கள் இடையிலான நதிகள் வழக்காடுதல் தீர்ப்பாயம் அமைந்தவுடன், தற்போது அமலில் உள்ள ரவி-பியாஸ் தீர்ப்பாயம் கலைக்கப்படும். அதன் வழக்கு கோப்புகள் அனைத்தும் புதிய தீர்ப்பாயத்துக்கு மாற்றப்படும்.


    எவ்வாறு பாதிப்பு?

    காவிரி விவகாரத்தில் 1991-இல் அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் 2007-இல் அளித்த தீர்ப்பு, 2013-இல் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன் பிறகு தீர்ப்பை தெளிவுபடுத்தக் கோரியும் திருத்தம் செய்ய வலியுறுத்தியும் உச்ச நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மனு தாக்கல் செய்தன.
    மத்திய அரசும், புதுச்சேரி அரசும் இந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று முறையிட்டன. இந்த விவகாரத்தை விசாரிக்க தனக்கு அதிகாரம் உண்டு என உச்ச நீதிமன்றம் 2016, டிசம்பரில் உத்தரவிட்டது. இதையடுத்து, வரும் ஜூலையில் இந்த விவகாரத்தை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
    இந்த நிலையில், மத்திய அரசு மக்களவையில் அறிமுகப்படுத்திய திருத்த மசோதா நிறைவேறினால், 2007-இல் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட காவிரி விவகார முறையீட்டு வழக்கு, "முடிக்கப்படாத நிலுவை விவகாரம்' ஆகக் கருதப்படும். அந்த வகையில், காவிரி விவகாரம், மாநிலங்கள் இடையிலான நதிகள் வழக்காடுதல் தீர்ப்பாயத்துக்கு மாற்றப்பட்டால் மீண்டும் தொடக்கத்தில் இருந்து காவிரி விவகாரம் விசாரிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும்.


    சந்தேகம் தரும் நடவடிக்கை

    ரவி - பியாஸ் நதிகள் தீர்ப்பாயத்தின் வழக்கை மட்டும், மாநிலங்கள் இடையிலான நதிகள் தீர்ப்பாயத்துக்கு மாற்ற வகை செய்யும் 11-ஆவது பிரிவை திருத்த மசோதாவில் சேர்த்த மத்திய அரசு, காவிரி விவகாரத்தை பற்றி மதோதாவில் எதுவும் குறிப்பிடாமல் மௌனம் சாதித்துள்ளது பல சந்தேகங்களை எழுப்புகிறது.
    மொத்தத்தில், காவிரி விவகாரத்தை மீண்டும் விசாரித்து நதி நீர்ப் பங்கீட்டை தீர்மானிக்க வேண்டும் என்ற கர்நாடகத்தின் வாதத்துக்கு இந்தத் திருத்த மசோதா உதவுவதாகக் கருதப்படுகிறது. அதனால்தான் இந்தத் திருத்த மசோதாவை தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள்
    நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆட்சேபிக்க வேண்டும் என்ற கருத்து அரசியல் நோக்கர்களிடையே பரவலாக வலுத்துள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai