சுடச்சுட

    

    ஸ்ரீநகர்: போலீஸாரை தாக்க முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

    By DIN  |   Published on : 27th March 2017 01:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் அருகே போலீஸாரை பதுங்கியிருந்து தாக்க முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    இதுதொடர்பாக, தெற்கு காஷ்மீர் காவல்துறை துணை ஐ.ஜி. எஸ்.பாணி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
    புல்வாமா காவல்துறை கண்காணிப்பாளர் ராயீஸ் அகமது, அவந்திபோரா காவல்துறை கண்காணிப்பாளர் ஜாகீத் மாலிக், புல்வாமா மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சந்தன் கோலி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீநகரை அடுத்த பட்கம்போரா பகுதியில் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.
    அப்போது, அங்கு பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் காரில் ஏறி போலீஸாரின் வாகன அணிவகுப்பை பின்தொடர்ந்தனர். அவந்திபோரா - புல்வாமா எல்லைப் பகுதியை கடந்தபோது பயங்கரவாதிகள், காவல்துறை அதிகாரிகள் பயணித்த வாகனங்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர்.
    இதையடுத்து, போலீஸார் சுதாரித்துக் கொண்டு அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதில், பயங்கரவாதிகள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    மேலும், அவர்களிடமிருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
    விசாரணையில் அவர்கள் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாபாஸ் சஃபி வானி, ஃபரூக் அகமது ஹுரா என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் பயணித்த காரின் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். அவரைப் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் பாணி.
    காவலரின் துப்பாக்கி பறிப்பு: இதனிடையே, ஜம்முவில் காவலர் ஒருவர் மீது மிளகாய்ப் பொடியைத் தூவி துப்பாக்கி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜம்முவில் முஸ்லிம் மதகுரு மௌலானா தெஹ்லாவின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருபவர் காவலர் முகமது ஹனீஃப். இவர் ஞாயிற்றுக்கிழமை காவல்நிலையத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனங்களில் வந்த 3 இளைஞர்கள், முகமது ஹனீஃப் மீது மிளகாய்ப் பொடியைத் தூவினர். பின்னர், அவரிடமிருந்த ஏ.கே. 47 ரக துப்பாக்கியைப் பறித்துச் சென்றனர்.
    இதுதொடர்பாக, போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai