சுடச்சுட

    

    ஆபாச பேச்சால் பதவி விலகிய அமைச்சர்: நீதி விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு

    By DIN  |   Published on : 28th March 2017 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    PinarayiC

    கேரளத்தில் பெண் ஒருவருடன் தொலைபேசியில் ஆபாசமாகப் பேசிய குற்றச்சாட்டில் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சசீந்திரன் பதவி விலகிய விவகாரம் குறித்து நீதி விசாரணை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
    திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் இது தொடர்பாகக் கூறியதாவது:
    பதவி விலகிய அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் மீதான குற்றச்சாட்டு குறித்து நீதி விசாரணை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த விசாரணைக்கான நீதிபதியாக யாரை நியமிப்பது என்பது குறித்து புதன்கிழமை நடைபெறும் கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து தனது மாண்பைக் காப்பாற்றும் வகையில் சசீந்திரன் பதவி விலகிவிட்டார் என்றாலும், தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். மேலும், எவ்வித விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார் என்றும் கூறியுள்ளார். அவரது முடிவை மக்கள் வரவேற்றுள்ளனர் என்றார் அவர். முன்னதாக, பினராயி விஜயனை, சசீந்திரன் சந்தித்துப் பேசினார்.
    முன்னதாக, கேரள போக்குவரத் துறை அமைச்சராக சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசீந்திரன் (71) பதவி வகித்து வந்தார். அவர், தன்னிடம் உதவி கேட்ட பெண் ஒருவரிடம் தொலைபேசியில் ஆபாசமாகப் பேசியதாக ஆடியோ ஒன்று மலையாள தொலைக்காட்சி சேனலில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வெளியானது. இதையடுத்த சில மணி நேரத்திலேயே அமைச்சர் பதவியில் இருந்து விலகுவாத சசீந்திரன் அறிவித்தார். எனினும் தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்தார். எவ்வித விசாரணைக்கும் தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்தார்.
    இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டு வர உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்று எதிர்க்கட்சியான காங்கிரஸும் வலியுறுத்தியது.
    கேரளத்தில் இடதுசாரிகள் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்து 10 மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் இரு அமைச்சர்கள் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி பதவி விலக நேரிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    முன்னதாக, தொழில்துறை அமைச்சராக இருந்த ஜெயராஜன் கடந்த அக்டோபர் மாதம் பதவி விலகினார். மாநிலத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் தனது உறவினர்களை நியமித்தது தொடர்பான குற்றச்சாட்டு காரணமாக அவர் ராஜிநாமா செய்ய நேரிட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai