சுடச்சுட

    

    ஏர் இந்தியா மேலாளர் தாக்கப்பட்ட விவகாரம்: சிவசேனை எம்.பி. கெய்க்வாடின் ஆதரவாளர்கள் உஸ்மானாபாதில் முழு அடைப்புப் போராட்டம்

    By DIN  |   Published on : 28th March 2017 02:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏர் இந்தியா விமான மேலாளரைத் தாக்கிய சிவசேனை எம்.பி. ரவீந்திர கெய்க்வாடின் ஆதரவாளர்கள் உஸ்மானாபாதில் திங்கள்கிழமை முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிவசேனையைச் சேர்ந்த ரவீந்திர கெயிக்வாட், மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதி எம்.பி. ஆவார்.
    இவர் புணேவிலிருந்து தில்லிக்குச் செல்ல ஏர் இந்தியா விமானத்தின் பிசினஸ் வகுப்பு இருக்கையை முன்பதிவு செய்திருந்தார்.
    இந்நிலையில், புணே விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை காலை ஏர் இந்தியா விமானத்தில் ஏற முயன்றபோது எக்கானமி வகுப்பு இருக்கைகள் மட்டுமே உள்ளதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    எனினும், அவர் அந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டார். தில்லியை அடைந்தபோது, அவர் விமானத்திலிருந்து வெளியேற மறுத்துள்ளார்.
    இதனால், விமான மேலாளர் சுகுமாருக்கும், ரவீந்திர கெய்க்வாடுக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, சுகுமாரை ரவீந்திர கெய்க்வாட் தனது காலணியால் தாக்கினார்.
    மேலும், இதற்காகத் தாம் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.
    இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் ரவீந்திர கெய்க்வாட் மீது தில்லி காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், அவருக்கு எதிராக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
    இதையடுத்து, ரவீந்திர கெய்க்வாட் தங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானங்களில் பயணம் செய்வதற்கு ஏர் இந்தியா தடை விதித்தது. தொடர்ந்து, பிற தனியார் விமான நிறுவனங்களும் ரவீந்திர கெய்க்வாடுக்கு இதேபோன்ற தடையை விதித்தன.
    இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரவீந்திர கெய்க்வாடின் ஆதரவாளர்கள் உஸ்மானாபாதில் திங்கள்கிழமை முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai