சுடச்சுட

    

    காஷ்மீரில் போராட்டக்காரர்களை கலைக்க பெல்லட் ரக துப்பாக்கிகளுக்கு பதில் வேறு உபாயங்கள்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை

    By DIN  |   Published on : 28th March 2017 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Pellet-

    ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தும் போராட்டக்காரர்களைக் கலைப்பதற்கு பெல்லட் ரக துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு பதில் வேறு உபாயங்களைக் கையாளலாம் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
    ஜம்மு-காஷ்மீரில் போராட்டக்கார்களை கலைப்பதற்கு பாதுகாப்புப் படையினர் பெல்லட் ரக துப்பாக்கிகளால் சுடுவதால் ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், பலர் படுகாயமடைந்திருப்பதாகவும் குற்றம்சாட்டி, அந்த மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் சங்கம் வழக்கு தொடுத்தது.
    இந்த மனுவை ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. அப்போது உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், பெல்லட் ரக துப்பாக்கிகளுக்குப் பதில் வேறு உபாயங்களைக் கையாள்வது குறித்த பரிந்துரைகளை அளிக்க நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்திருப்பதை சுட்டிக்காட்டியது.
    இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநில உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், நிபுணர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்வதற்காக காத்திருக்காமல், தங்களது வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதாகவும், பெல்லட் ரக துப்பாக்கிகளை பயன்படுத்த உத்தரவிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து விட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
    இந்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
    ஜம்மு-காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் பெல்லட் ரக துப்பாக்கிகளைக் கொண்டு சுடுவதால் நேரிடும் உயிரிழப்பு கவலையளிக்கிறது. ஆதலால், பெல்லட் ரக துப்பாக்கிகளுக்குப் பதில், போராட்டக்காரர்களைக் கலைப்பதற்கு வேறு உபாயங்களைக் கையாள்வது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும்.
    போராட்டக்காரர்கள் மீது மாற்று வழியில் நடவடிக்கை எடுப்பது குறித்து அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி விரிவான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். போராட்டக்கார்கள் மீது அதிகப்படியான அளவுக்கு பெல்லட் ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்டு, மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.
    பெல்லட் ரக துப்பாக்கிகளுக்குப் பதில் மாற்று வழியில் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்ட நிபுணர் குழு அளித்த அறிக்கையின் நகலை உச்ச நீதிமன்றத்தில் அட்டார்னி ஜெனரல் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai