சுடச்சுட

  

  சமூக நலத்திட்டங்களின் பயன்களைப் பெற ஆதாரை கட்டாயமாக்க கூடாது

  By DIN  |   Published on : 28th March 2017 05:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  supreme_court

  சமூக நலத்திட்டங்களின் பயன்களைப் பெற ஆதார் அட்டையைக் கட்டாயமாக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
  பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்தும், ஆதார் அட்டை வழங்குவதற்காக கை விரல் ரேகை, கண் கருவிழிப் பதிவு போன்றவற்றைப் பதிவு செய்வது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பில் இருந்தும் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
  இந்நிலையில், இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
  அப்போது, மனுதாரர்கள் ஒருவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஷியாம் திவான், 'ஆதார் அட்டையை கட்டாயமாக்க கூடாது; மக்கள் விருப்பப்பட்டால் அதனைப் பயன்படுத்தலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கு மாறாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
  மேலும், ஆதார் அட்டை திட்டத்தை செயல்படுத்தி வரும் இந்திய தனிநபர் அடையாள ஆணையத்துக்கு எந்தவித சட்ட அங்கீகாரமும் இல்லை; மத்திய அரசின் அறிவிக்கையின் கீழும் அது செயல்படவில்லை. எனினும், பொதுமக்களின் கை விரல் ரேகை, கண் கருவிழிப் பதிவு போன்றவற்றை தனியார் நிறுவனங்கள் மூலம் ஆதார் அட்டைக்காக அந்த அமைப்பு சேகரிக்கிறது என்று ஷியாம் திவான் சுட்டிக்காட்டினார்.
  இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:
  வங்கிக் கணக்கு தொடங்குவது போன்ற நலத்திட்டம் சாராத செயல்பாடுகளுக்கு ஆதார் அட்டையைக் கேட்பதைத் தடுக்க முடியாது. அதே நேரத்தில் சமூக நலத்திட்டங்களின் உதவிகளைப் பெற ஆதார் அட்டையைக் கட்டாயமாக்க கூடாது.
  ஆதார் அட்டைக்காக பெறப்படும் தகவல்கள் தனிமனித உரிமைகளுக்கு எதிரானதா? என்பது குறித்து முடிவு செய்ய 7 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அமைக்கப்பட வேண்டியது அவசியம். இது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றனர்.
  முன்னதாக, ஆதார் அட்டையைக் கட்டாயமாகக் கூடாது என்றும், கை விரல் ரேகை உள்ளிட்ட தனிநபர் தகவல்களைச் சேகரிக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மத்திய அரசு மேல்முறையீடு செய்தது.
  அதன் பிறகு, மக்கள் விருப்பப்பட்டால் 100 நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், அனைத்து வகையான ஓய்வூதியத் திட்டங்கள் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
  பின்னர், எரிவாயு சிலிண்டர் மானியம், பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றுக்கும் ஆதாரைப் பயன்படுத்த நீதிமன்றம் அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai