சுடச்சுட

    

    சிறுபான்மையினர் நல ஆணைய விவகாரம்: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி

    By DIN  |   Published on : 28th March 2017 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் நல ஆணையங்களில் காலியாக உள்ள பல்வேறு பொறுப்புகளுக்கு தகுதியானவர்களை நியமிக்காமல் இருப்பதாகக் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் திங்கள்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனர்.
    அந்த ஆணையங்களின் செயல்பாட்டை முற்றிலுமாக முடக்கி விடலாம் என்று மத்திய அரசு நினைக்கிறதா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். மத்திய அமைச்சர் மற்றும் மாநிலங்களவைத் துணைத் தலைவரின் சமாதானத்தை ஏற்க மறுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை அலுவல்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
    பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தினருக்காக தனித்தனியே தேசிய நல ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன.
    அவற்றில் தலைவர் பதவி உள்பட நிர்வாக ரீதியான பல்வேறு பொறுப்புகளுக்கு உரிய நபர்களை நியமிக்காமல் மத்திய அரசு காலந்தாழ்த்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
    இந்நிலையில், இந்த விவகாரம் மாநிலங்களவையிலும் திங்கள்கிழமை எதிரொலித்தது. கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் நரேந்திர பதானியா இப்பிரச்னையை எழுப்பினார். இதுகுறித்து அவையில் அவர் பேசியதாவது:
    தேசிய நல ஆணையங்களில் காலியாக உள்ள முக்கியப் பொறுப்புகள் நிரப்பப்படாமல் இருப்பது ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கை. சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையங்களின் தலைவிதி இனி இப்படித்தான் இருக்கும் என்ற செய்தியைத்தான் இத்தகைய அலட்சியப் போக்கின் வாயிலாக மத்திய பாஜக அரசு கூற விழைகிறதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
    இதைத்தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, 'அனைத்து தேசிய நல ஆணையங்களையும் மறுகட்டமைப்பு செய்ய வேண்டியுள்ளது; அதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடும்' என்றார்.
    ஆனால், இந்தப் பதிலை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
    அப்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான சீதாராம் யெச்சூரி, 'இதுதான் பாஜக வாக்குறுதியளித்த நல்லாட்சியா?' என்று கேள்வி எழுப்பினார்.
    இதைத்தொடர்ந்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி பேசியதாவது:
    மக்களுக்கு உள்ள அடிப்படை உரிமைகளுக்குப் புறம்பாக மத்திய அரசு செயல்படுகிறது. காலியாக உள்ள பொறுப்புகளை இன்னும் நிரப்பாமல் வைத்திருப்பதன் நோக்கம் என்ன? இதன் மூலம் அந்த ஆணையங்களின் செயல்பாட்டை முடக்க மத்திய அரசு விரும்புகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது என்றார் அவர்.
    இதே கருத்தை காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங்கும் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ், சமாஜவாதி, தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் அவர்களை அமைதியாக இருக்குமாறு வலியுறுத்தியபோதிலும், அதனை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து அவையை பல முறை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக முக்கிய அலுவல்கள் எதுவும் திங்கள்கிழமை நடைபெறவில்லை.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai