Enable Javscript for better performance
ஜம்மு-காஷ்மீரில் முஸ்லிம்கள் சிறுபான்மையினரா? மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி- Dinamani

சுடச்சுட

    

    ஜம்மு-காஷ்மீரில் முஸ்லிம்கள் சிறுபான்மையினரா? மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

    By DIN  |   Published on : 28th March 2017 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    supreme_court

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மையின மக்களா? என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் கலந்து பேசி முடிவை அறிவிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
    முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்கள், சிறுபான்மையினருக்கு உரிய பலன்களை அனுபவித்து வருவதாகக் கூறி ஜம்முவைச் சேர்ந்த வழக்குரைஞர் அங்குர் சர்மா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
    அதில், ஒரு மாநிலத்தின் மக்கள்தொகையின் அடிப்படையில்தான் அந்த மாநிலத்தில் யார் சிறுபான்மையினர் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
    ஆனால், ஜம்மு-காஷ்மீரில் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்கள் சிறுபான்மையினருக்குரிய பலன்களை அனுபவித்து வருகின்றனர்.
    2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புப்படி ஜம்மு-காஷ்மீர் மக்கள்தொகையில் 68.31 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர். மாநிலத்தில் உண்மையாக சிறுபான்மையினராக உள்ள மக்களுக்கு அரசின் உதவிகள் கிடைப்பதில்லை.
    பெரும்பான்மையாக உள்ளவர்கள் சிறுபான்மையினருக்குரிய பலன்களை அனுபவிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
    மாநிலத்தில் யார் சிறுபான்மையினர் என்பதை முடிவு செய்ய மாநில சிறுபான்மையினர் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
    இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த விஷயம் குறித்து மத்திய அரசும், ஜம்மு-காஷ்மீர் மாநில அரசும் கலந்து பேசி, ஒரு மாதத்துக்குள் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஏனெனில், இது மிகவும் முக்கியமான பிரச்னை' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    முன்னதாக, இந்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதமும் உத்தரவு பிறப்பித்தது.
    அப்போது மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யாததை அடுத்து ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai