சுடச்சுட

    

    சரக்கு-சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) தொடர்பான நான்கு துணை மசோதாக்கள் மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.
    நாடு முழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் நோக்கில் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    4 மசோதாக்கள் தாக்கல்: இந்நிலையில், மத்திய சரக்கு-சேவை வரி மசோதா (சிஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி மசோதா (ஐஜிஎஸ்டி), யூனியன் பிரதேச சரக்கு-சேவை வரி மசோதா (யுடிஜிஎஸ்டி), ஜிஎஸ்டி-யால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி இழப்பை ஈடு செய்யும் மசோதா ஆகிய 4 மசோதாக்களை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
    எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாக்கள் குறித்து முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ள உரிய கால அவகாசத்தை மத்திய அரசு அளிக்கவில்லை என்பது அவர்களின் முக்கியக் குற்றச்சாட்டாக இருந்தது.
    இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ். அலுவாலியா, 'ஜிஎஸ்டி-யின் 4 துணை மசோதாக்களும் அரசு இணையதளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவே பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டன' என்றார்.
    விவாதிக்காதது ஏன்?: எனினும், ஜிஎஸ்டி மிகவும் முக்கியமானது. இது குறித்து கடந்த வாரம் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்காதது ஏன்? என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.
    அப்போது, காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் கூறியதாவது:
    ஜிஎஸ்டியின் துணை மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்படும் என்று மக்களவைக் குறிப்பில் இல்லை. ஜிஎஸ்டி போன்ற முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்தும்போது உரிய நடைமுறைகளை மத்திய அரசு கடைபிடிக்க வேண்டும் என்றார்.
    மக்களவை காங்கிரஸ் குழுவின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் செளகதா ராய் உள்ளிட்டோரும் ஜிஎஸ்டி மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    மக்களவைத் தலைவர் நிராகரிப்பு: எனினும், எதிர்ப்பை ஏற்றுக் கொள்ள மறுத்த மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், 'கடந்த சனிக்கிழமையன்றே எம்.பி.க்களின் பார்வைக்கு மசோதா வைக்கப்பட்டுவிட்டது. எனவே, இப்போது மக்களவையில் தாக்கல் அது செய்யப்பட்டதில் தவறேதும் இல்லை' என்றார்.
    சுதந்திர இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வரிச் சீர்திருத்த நடவடிக்கையாக ஜிஎஸ்டி கருதப்படுகிறது. நாடு முழுவதிலும் ஒரே சீரான வரி விதிப்பு முறை என்பது இதன் முக்கிய அம்சமாகும். இப்போது நடைமுறையில் உள்ள, மத்திய அரசின் கலால் வரி, சேவை வரி, மாநில அரசுகளின் மதிப்புக் கூட்டு வரி உள்ளிட்டவற்றுக்கு மாற்றாக அவற்றை இணைத்து ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட இருக்கிறது.
    நான்கு அடுக்கு வரி: ஜிஎஸ்டியில் 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளாக வரி விதிக்கப்படும். சொகுசு கார், குளிர்பானங்கள், புகையிலைப் பொருள்களுக்கு அதிகபட்ச வரியுடன் கூடுதல் வரியும் உண்டு. இதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது.
    எந்ததெந்த பொருள்கள் மற்றும் சேவைகள் எந்த வரி வரம்புக்குள் வர வேண்டும் என்பது குறித்து அடுத்த மாதம் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது.
    ஜிஎஸ்டி-யின் துணை மசோதாக்களில், மாநில சரக்கு-சேவை வரி மசோதாவை (எஸ்ஜிஎஸ்டி) மட்டும் அனைத்து மாநில சட்டப் பேரவைகளிலும் நிறைவேற்றி ஒப்புதல் பெற வேண்டும்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai