சுடச்சுட

  

  பெருநிறுவனங்களுக்கு சாதகமாகச் சட்டத் திருத்தங்கள்: மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 28th March 2017 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெருநிறுவனங்களுக்கும், மத்திய அரசுக்கு நெருக்கமானவர்களுக்கும் சாதகமாக இருக்கும் வகையில் நிகழாண்டுக்கான நிதி மசோதாவில் பல்வேறு சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
  மக்களவையில் 2017-ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது. விமர்சனத்துக்குரிய சில அம்சங்களும், சட்டத் திருத்தங்களும் அதில் இடம்பெற்றிருந்தன.
  குறிப்பாக, வருமான வரித் துறையினர் எந்த விதமான காரணமும் தெரிவிக்காமல் சோதனை நடத்துவதற்கு புதிய சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேலும், அரசியல் கட்சிகளுக்கு பெரு நிறுவனங்கள் வழங்கும் நன்கொடைக்கான உச்ச வரம்பை ரத்து செய்தும், தேர்தல் நிதி முதலீட்டுப் பத்திரங்கள் வாயிலாக பெயர் வெளியிடாமல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கவும் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  இந்த அம்சங்கள் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு ஆளாகின. இந்நிலையில், நிதி மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் உறுப்பினர் கபில் சிபல் பேசியதாவது:
  நிதி மசோதாவில் இடம்பெற்றுள்ள சட்டத் திருத்தங்களில் வருமான வரித் துறையினருக்கு அதிகப்படியான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எந்தக் காரணமும் தெரிவிக்காமல் சோதனை நடத்த அவர்களுக்கு அனுமதி வழங்கியிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது.
  இதைத் தவிர வருமான வரித் தாக்கல் செய்ய ஆதார் எண் அவசியம் என புதிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் வாயிலாக தனிநபர் விவரங்களை ரகசியமாக அறிந்து கொள்வதற்கும், அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதற்கும் வாய்ப்புள்ளது.
  முன்பு பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது இதே விவகாரத்தை தற்போதைய பிரதமர் மோடியும், அருண் ஜேட்லியும் எதிர்த்தனர். தற்போது அதனை ஆதரித்து சட்டத் திருத்தம் கொண்டுவந்துள்ளனர். இதிலிருந்தே மத்திய அரசின் இரட்டை நிலைப்பாட்டை அறிந்துகொள்ளலாம்.
  மத்திய அரசு கூறி வரும் 'வளர்ச்சி' என்பது மதநோக்கங்களையும், கொள்கைகளையும் மேம்படுத்துவதுதானே தவிர வேறொன்றும் இல்லை. இது ஒருபுறமிருக்க அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதில் பெரு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இது ஆளுங்கட்சிக்கு முறைகேடாக அதிக நன்கொடை கிடைப்பதற்கு வழிவகுக்கும்.
  இதைத்தவிர, நிறுவனச் சட்டத்திலும் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் சாதாரண மசோதாவாகத் தாக்கல் செய்தால் மாநிலங்களவையில் அதனை நிறைவேற்ற இயலாது என்று மத்திய அரசுக்குத் தெரியும். அதன் காரணமாகவே பல்வேறு சட்டத் திருத்தங்களை நிதி மசோதாவின் கீழ் அரசு கொண்டுவந்துள்ளது என்றார் கபில் சிபல்.
  இதைத் தொடர்ந்து பேசிய சமாஜவாதி, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் நிதி மசோதா விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai