சுடச்சுட

    

    2-ஜி வழக்கு: வெளிநாடு செல்ல கேத்தான் தம்பதிக்கு அனுமதி மறுப்பு

    By புதுதில்லி  |   Published on : 28th March 2017 09:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட "லூப் டெலிகாம்' நிறுவனத்தின் தலைவர் ஐ.பி.கேத்தான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வெளிநாடு செல்வதற்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முந்தைய ஆட்சிக் காலத்தின்போது 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை எம்.பி.கனிமொழி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    அதேபோன்று "லூப் டெலிகாம்' நிறுவனத்துக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் அந்நிறுவனத்தின் தலைவர் கேத்தான் மற்றும் அவரது மனைவி கிரண் கேத்தான் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், மருத்துவப் பரிசோதனை மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக துபை செல்வதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அவர்கள் இருவரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    அந்த மனு, நீதிபதி ஓ.பி.ஷைனி முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் கூறியதாவது:
    2-ஜி முறைகேடு தொடர்பான முக்கிய வழக்கிலும், அதுதொடர்பான பிற வழக்குகளிலும் இறுதி வாதங்கள் நிறைவடைந்து விட்டன.

    இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் இந்த வழக்குகளில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் வெளிநாடு செல்ல அனுமதி வழங்குவது சரியாக இருக்காது. எனவே, மனுதாரர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்றார் ஓ.பி.ஷைனி.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இதேகோரிக்கையை வலியுறுத்தி கேத்தான் தம்பதி தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது நினைவுகூரத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai