சுடச்சுட

    
    ravisankarprasath

    அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை. ஆனால், அனைவரும் ஆதார் அட்டை பெற வேண்டியது மிகவும் முக்கியமானது என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கமளித்துள்ளார்.
    அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுகிறது என்றும், அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக கை ரேகை, கண் கருவிழி அடையாளம் உள்ளிட்ட தனிப்பட்ட அடையாளங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படுகின்றன என்றும் புகார் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமூக நலத் திட்டங்களின் பயன்களைப் பெற ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை ஓர் உத்தரவைப் பிறப்பித்தது.
    இந்நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை இது தொடர்பாக ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
    ஆதார் அட்டை தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இப்போதும் விசாரணையில் உள்ளன. எனவே, அது தொடர்பாக எந்தக் கருத்தையும் கூற முடியாது. எனினும், ஆதார் அட்டையை அனைவரும் பெற்றுக் கொள்வது மிகவும் முக்கியமானது. அதே நேரத்தில் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன்.
    ஆதார் அட்டை இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு போன்றவற்றை அடையாள ஆவணமாகக் கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறலாம் என்றார் அவர்.
    பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தில் சாப்பிடும் மாணவர்கள் ஆதார் அட்டை அளிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் முன்பு உத்தரவிட்டது குறித்து விளக்கமளித்த அத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், 'பள்ளி மாணவ, மாணவியருக்கு மதிய உணவு வழங்கக் கூடாது என்பது இதன் நோக்கமல்ல.
    மதிய உணவுத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர வேண்டும். அதில் முறைகேடுகளைத் தடுக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.
    ஆதார் அட்டை இல்லை என்ற காரணத்துக்காக மாணவர்களுக்கு மதிய உணவு மறுக்கப்படாது. அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு மட்டுமின்றி ஆதார் அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai