சுடச்சுட

  

  உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் நால்வர், மர்ம நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
  இந்த விவகாரம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் கலந்து ஆலோசித்தார். இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது சுஷ்மாவிடம் ஆதித்யநாத் உறுதியளித்ததாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது:
  உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த சிறுவன் மணீஷ். பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த அவரை, கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளிநாட்டினர் சிலர் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. மணிஷுக்கு போதை மருந்துகளைக் கொடுத்து கடத்தல்காரர்கள் கொலை செய்ததாக அவரது பெற்றோர் புகாரளித்தனர்.
  அதன் அடிப்படையில் நைஜீரியாவைச் சேர்ந்த சிலரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இறந்துபோன மணீஷின் நினைவாக நொய்டாவில் அமைதி ஊர்வலம் நடந்தது. அப்போது சாலையில் சென்ற 4 நைஜீரியர்களை ஊர்வலத்தில் கலந்துகொண்ட சிலர் கண்மூடித்தனமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
  இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.
  இந்தச் சம்பவம் குறித்து நியாயமான முறையில் விசாரணை நடத்தப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
  இதனிடையே, இந்தத் தாக்குதல் சம்பவம் வெறுப்புணர்வின் காரணமாக நடந்ததாகக் கூறி, இந்தியாவில் உள்ள தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai