சுடச்சுட

  

  சிறுபான்மையினர் நல ஆணைய விவகாரம்: எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கியது மாநிலங்களவை

  By DIN  |   Published on : 29th March 2017 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  parliamentofindia

  சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் நல ஆணையங்களில் காலியாக உள்ள இடங்களை மத்திய அரசு நிரப்பாமல் இருப்பதாகக் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டனர்.
  இதனால், அவை தொடர்ந்து பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இறுதியில் அவை நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கியது.
  எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு: பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தினருக்காக தனித்தனியே தேசிய நல ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன.
  அவற்றில் தலைவர் பதவி உள்பட நிர்வாக ரீதியான பல்வேறு பொறுப்புகளுக்கு உரிய நபர்களை நியமிக்காமல் மத்திய அரசு காலம்தாழ்த்தி வருவதாக மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திங்கள்கிழமை குற்றம்சாட்டி அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமையும் இதே விவகாரத்தை எதிர்க்கட்சியினர் எழுப்பினர்.
  அமளியும், ஒத்திவைப்பும்...: காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சி எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசு பல்வேறு பொய்யான தகவல்களை கூறுவதாகக் குற்றம்சாட்டி கோஷம் எழுப்பினர்.
  இதற்கு பதிலளித்து மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, 'அனைத்து ஆணையங்களும் செயல்பட்டு வருகின்றன. அதில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான பணிகளை நடைபெற்று வருகின்றன' என்றார்.
  எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் அவையை 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார். மீண்டும் அவை கூடியபோதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இதே விவகாரத்தை எழுப்பி கோஷமிட்டனர். இதையடுத்து அவை மீண்டும் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
  மீண்டும் ஒத்திவைப்பு: பின்னர் அவை கேள்வி நேரத்துக்காக மீண்டும் கூடியபோதும் அமைதி திரும்பவில்லை. இதையடுத்து மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி அவையை மீண்டும் ஒத்திவைத்தார். மீண்டும் அவை கூடியபோது பேசிய ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத் யாதவ், 'சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் ஆணைய விவகாரம் மிகவும் முக்கியமானது. இது குறித்து விவாதிக்க வேண்டும்' என்றார். ஆனால், கேள்வி நேரத்தை நடத்த உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஹமீது அன்சாரி வலியுறுத்தினார். இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர்.
  நாள் முழுவதும் முடக்கம்: அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, '5 மாநிலத் தேர்தல் காரணமாகவே, சிறுப்பான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் ஆணைய நியமனத்தை அரசு மேற்கொள்ளவில்லை. இது தொடர்பான விவரத்தை அவையில் தாக்கல் செய்ய அரசு தயாராக இருக்கிறது' என்றார். எனினும், அமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டதால் அவையை மீண்டும் ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவையில் தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவியதால் அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இதனால், முக்கிய அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai