Enable Javscript for better performance
தற்போதைய சூழலில் லோக்பாலை அமைக்க முடியாது: உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தற்போதைய சூழலில் லோக்பாலை அமைக்க முடியாது: உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு விளக்கம்

    By DIN  |   Published on : 29th March 2017 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தற்போதைய சூழலில், லோக்பால் சட்டத்தில் திருத்தம் கொண்டு வராமல் அந்த அமைப்பை ஏற்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை விளக்கமளித்தது.
    இதையடுத்து, லோக்பால் அமைப்பை ஏற்படுத்தக் கோரும் பல்வேறு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
    அனைத்துத் துறைகளிலும் நடைபெறும் ஊழல்களை விசாரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட லோக்பால் சட்டத்தை அமல்படுத்தாமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவதாகக் கூறி 'காமன் காஸ்' என்ற தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
    அந்த மனு உள்பட, லோக்பால் குறித்த பல்வேறு மனுக்கள் நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
    அப்போது, தற்போதுள்ள சூழலில், லோக்பால் சட்டத்தில் 'எதிர்க்கட்சித் தலைவர்' என்பதற்கான வரையறையில் திருத்தம் செய்யாமல், லோக்பால் அமைப்பை ஏற்படுத்த முடியாது என்று மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோத்தகி தெரிவித்தார்.
    லோக்பால் நியமனக் குழுவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இடம் பெற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
    தற்போது எதிர்க்கட்சிகளில் அதிக எம்.பி.க்களைக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் போதிய எண்ணிக்கையில் எம்.பி.க்கள் இல்லாததால், அந்தக் கட்சியின் தலைவர் சோனியா காந்தியால் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக முடியவில்லை.
    எனவே, நியமனக்குழுவில் இடம் பெற வேண்டியவர்களின் வரிசையில் 'மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்' என்பதற்குப் பதிலாக, 'எதிர்க்கட்சிகளில் பெரிய கட்சியின் தலைவர்' என்ற திருத்தத்தை லோக்பால் சட்டத்தில் கொண்டு வந்தால் மட்டுமே லோக்பால் அமைப்பை ஏற்படுத்த முடியும் என்று முகுல் ரோத்தகி தெரிவித்தார்.
    மனுதாரரான 'காமன் காஸ்' தொண்டு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சாந்தி பூஷண், லோக்பால் மசோதா கடந்த 2013-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 2014-ஆம் ஆண்டு அமலுக்கு வந்தாலும், லோக்பால் அமைப்பை ஏற்படுத்தாமல் மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றம் சாட்டினார். அனைத்துத் தரப்பினரின் வாதங்களையும் கேட்டறிந்த பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.
    ஏற்கெனவே, லோக்பால் சட்டத் திருத்தம் குறித்து நாடாளுமன்ற நிலைக் குழு அளித்த பரிந்துரையின் நகலை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.
    மேலும், சட்டத் திருத்தத்தைக் காரணம் காட்டி லோக்பால் சட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போடக் கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai