Enable Javscript for better performance
தில்லி டிடிஇஏ தமிழ்ப் பள்ளிக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்குமா?- Dinamani

சுடச்சுட

    

    தில்லி டிடிஇஏ தமிழ்ப் பள்ளிக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்குமா?

    By DIN  |   Published on : 29th March 2017 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    delhi-school

    கிழக்கு தில்லி மயூர் விஹார் ஃபேஸ் 3-இல் நடைபெற்று வரும் டிடிஇஏ பள்ளிக்கான கட்டுமானப் பணிகள்.

    தில்லி மயூர் விஹார் மூன்றாவது பேஸில் தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) எட்டாவது தமிழ்ப் பள்ளிக் கட்டடம் அமைப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதையொட்டி, கட்டுமானப் பணிகளுக்கும் பள்ளிக்கான உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் தமிழக அரசு மற்றும் தில்லிவாழ் தமிழர்களிடம் இருந்து டிடிஇஏ நிர்வாகம் நிதியுதவியை எதிர்பார்த்துள்ளது.
    தில்லியில் லோதி எஸ்டேட், மந்திர் மார்க், பூசா சாலை, லக்ஷ்மிபாய் நகர்,மோதி பாக், மந்திர்மார்க்,ஆர்.கே. புரம் ஆகிய இடங்களில் டிடிஇஏ தமிழ்ப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 7 ஆயிரம் மாணவர்கள் பயிலும் இப்பள்ளிகள் 90 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டவை. டிடிஇஏவின் தலைவர் எம்.சூர்யநாராயணன், செயலர் ஆர்.ராஜு ஆகியோர் வழிகாட்டுதலுடன் டிடிஇஏ நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
    2014-இல் பூமி பூஜை: இந்நிலையில், மயூர் விஹார் ஃபேஸ் 3-இல் பள்ளியின் எட்டாவது பள்ளிக்கான பூமி பூஜை 2014, நவம்பர் 28-இல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தின் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டு டிடிஇஏ ஆசிரியர்கள், முதல்வர்கள் ஆகியோரின் பணம், பொருள் உதவியுடன் கட்டுமானப் பணிகளை டிடிஇஏ நிர்வாகம் தற்போது தொடங்கியுள்ளது.
    ரூ.20 கோடி மதிப்பீடு: இப்பணிகள் குறித்து டிடிஇஏ தலைவர் எம்.சூர்யநாராயணன் 'தினமணி' நிருபரிடம் கூறியதாவது: மயூர்விஹார் ஃபேஸ் 3-இல் சுமார் 2 ஏக்கர் பரப்பளவிலான நிலம், தில்லி வளர்ச்சி ஆணையத்தால் டிடிஏவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடம் சமதளப்படுத்தப்பட்டு, சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிந்த பிறகு தொடர்ந்து கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளது. இதற்கு சுமார் ரூ.20 கோடி தேவை என மதிப்பிட்டுள்ளோம்' என்றார்.
    டிடிஇஏ செயலர் ஆர். ராஜு கூறுகையில், 'டிடிஇஏ தமிழ் பள்ளிகள் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பிறகு எட்டாவது புதிய பள்ளிக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 99 அறைகள், ஐந்து அடுக்கு மாடிகள் கொண்ட வகையில் ரூ.20 கோடி மதிப்பில் இக்கல்வி நிலையத்தை அமைக்க தீர்மானித்துள்ளோம். இதற்கு நிதியும் பொருளுதவியும் தேவைப்படுகிறது. தமிழக அரசிடம் நிதியுதவி வழங்குமாறு கோரி கடிதம் எழுதியுள்ளோம். தமிழக அரசு நிச்சயம் நிதியுதவி அளிக்கும் என்று நம்புகிறோம்' என்றார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai