சுடச்சுட

  

  லலித் மோடி விவகாரம்: இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது இன்டர்போல்

  By DIN  |   Published on : 29th March 2017 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  lalith

  ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை இன்டர்போல் அமைப்பு நிராகரித்து விட்டது.
  2009-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு செய்ததாக தெரிவிக்கப்பட்ட புகாரின்பேரில் லலித் மோடிக்கு எதிராக சென்னை போலீஸார் கடந்த 2010-ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்தனர். இதை அடிப்படையாகக் கொண்டு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் லலித் மோடிக்கு எதிராக அமலாக்கத் துறையும் தனியே கடந்த 2012-ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்தது.
  இதனிடையே, இந்தியாவில் தாம் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக லலித் மோடி, நாட்டை விட்டு வெளியேறி பிரிட்டனுக்குச் சென்றார். அங்கிருந்து நாட்டுக்கு திரும்பிவரவில்லை. அமலாக்கத் துறையின் விசாரணையிலும் நேரில் ஆஜராகவில்லை.
  இதையடுத்து, லலித் மோடியை கைது செய்து நாட்டுக்கு கொண்டு வரும் திட்டத்துடன் அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என்று இன்டர்போலுக்கு அமலாக்கத் துறை கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பல்வேறு கோரிக்கைகளை அனுப்பியது. ஆனால் அதன்மீது முடிவெடுக்காமல் இன்டர்போல் தாமதித்து வந்தது.
  இந்நிலையில், ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என்ற அமலாக்கத் துறையின் கோரிக்கையை இன்டர்போல் அமைப்பு நிராகரித்து விட்டது. இதுகுறித்து அந்த அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறும்போது, அமலாக்கத் துறையின் கோரிக்கையை பரிசீலித்த இன்டர்போல், லலித் மோடிக்கு சாதகமாக முடிவெடுத்துள்ளது என்றார்.
  லலித் மோடி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவிலும், தனக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கக்கோரும் இந்தியாவின் கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான ஆவணத்தையும் சுட்டுரை, இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் லலித் மோடி வெளியிட்டுள்ளார்.
  இன்டர்போலின் முடிவு குறித்து அமலாக்கத் துறையின் கருத்தை செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அமலாக்கத் துறை தரப்பில், மத்திய அரசு மற்றும் சிபிஐ (இன்டர்போலின் நடவடிக்கையை இந்தியாவில் அமல்படுத்தி வரும் அமைப்பாக சிபிஐ திகழ்கிறது) ஆகியவற்றிடம் இந்த விவகாரம் எடுத்துச் செல்லப்படும் என்று பதிலளிக்கப்பட்டது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai