சுடச்சுட

    

    சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: 5 வழக்குகளை மீண்டும் விசாரிக்க தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 30th March 2017 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடந்த 1984-ஆம் ஆண்டில் சீக்கியர்களுக்கு எதிராக மூண்ட கலவரம் தொடர்பான 5 வழக்குகளை மீண்டும் விசாரிப்பதற்கு தில்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
    சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில், தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு, தில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கீதா மித்தல், அனு மல்ஹோத்ரா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் சில கோப்புகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை பரிசீலித்துவிட்டு நீதிபதிகள் கூறியதாவது: 1984ஆம் ஆண்டு கலவரம் தொடர்பான 5 வழக்குகளில் சாட்சிகளையோ அல்லது புகார்தாரர்களையோ விசாரணை நீதிமன்றம் சரியாக விசாரிக்கவில்லை; துரித கதியில் தனது முடிவை விசாரணை நீதிமன்றம் எடுத்துள்ளது.
    எனவே அந்த 5 வழக்குகளையும் தில்லி போலீஸார் மீண்டும் விசாரிக்க வேண்டும். அடுத்தக்கட்ட விசாரணை ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அப்போது புகார்தாரர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் எம்எல்ஏ மகேந்தர் யாதவ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். கடந்த 1984-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அவரது சீக்கிய பாதுகாவலர்களால் கொலை செய்யப்பட்டதையடுத்து தில்லியில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இதில் சீக்கியர்கள் ஏராளமானோர் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பான 5 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முன்னாள் எம்எல்ஏ மகேந்தர் யாதவ் உள்ளிட்டோர் 1986-ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai