Enable Javscript for better performance
ஜிஎஸ்டி சட்டத்தை பாஜக எதிர்த்ததால் நாட்டுக்கு ரூ.12 லட்சம் கோடி இழப்பு: காங்கிரஸ் தாக்கு- Dinamani

சுடச்சுட

  

  ஜிஎஸ்டி சட்டத்தை பாஜக எதிர்த்ததால் நாட்டுக்கு ரூ.12 லட்சம் கோடி இழப்பு: காங்கிரஸ் தாக்கு

  Published on : 30th March 2017 12:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  verapamoily

  சரக்கு மற்றும் சேவை வரிக்கு (ஜிஎஸ்டி) பாஜக எதிர்ப்பு தெரிவித்ததால், நாட்டுக்கு ரூ.12 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
  ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவதற்கு ஏதுவாக மக்களவையில் 4 மசோதாக்களை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிமுகம் செய்தார். அந்த மசோதாக்கள் மீதான விவாதத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சருமான வீரப்ப மொய்லி தொடங்கி வைத்து பேசியதாவது: புரட்சிகர வரி சீர்திருத்தம் என்ற பெயரில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்ன கொண்டு வந்துள்ளதோ, அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை கிடையாது. இது சாதாரண குழந்தைத்தனமான நடவடிக்கைதான்.
  மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியின்போது ஜிஎஸ்டி மசோதாவை கொண்டு வர விரும்பியது. ஆனால், அதன்பிறகு 7 முதல் 8 ஆண்டுகள் காலதாமதத்துக்குப் பிறகுதான் அந்த மசோதா நிறைவேறியுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சியின்போது அந்த மசோதாவை சில கட்சிகள் தடுத்து நிறுத்திவிட்டன. அதற்கான காரணம், அந்த கட்சிகளுக்கு மட்டுமே தெரியும்.
  ஜிஎஸ்டி மசோதாவை காலதாமதம் செய்ததால் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் கோடி வரையிலும் இழப்பு ஏற்பட்டது. அதாவது நாட்டுக்கு மொத்தம் ரூ.12 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய இந்த நஷ்டத்துக்கு யார் இழப்பீடு தருவார்கள்? ஜிஎஸ்டி மசோதாவில் பல்வேறு வரிகளை மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ளது. இது ஜிஎஸ்டி மசோதா என்ன நோக்கத்துக்காக கொண்டு வரப்படுகிறதோ, அதற்கு எதிரானதாகும்.
  'ஒரே நாடு, ஒரே வரி' என்பது பழங்கதை ஆகிவிட்டது. ஜிஎஸ்டி மசோதாவில் பல்வேறு வரி விகிதங்கள், செஸ் வரிகள் இருக்கின்றன. மனை வணிகத்துறைதான், அதிக அளவு கருப்புப் பணத்தை உருவாக்குகிறது. இந்நிலையில் அந்த துறையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வராதது துரதிருஷ்டவசமானது. ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்ததும், வரி விதிப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பெரிய யுத்தம் வெடிக்கப் போகிறது என்று வீரப்ப மொய்லி பேசினார்.
  பாஜக எம்.பி. உதித் ராஜ் பேசியபோது, ஜிஎஸ்டி வரியானது, வரி விதிப்பில் ஒரே மாதிரியான ஒழுங்குமுறையை நாடு முழுமைக்கும் கொண்டு வரப்போகிறது என்றும், இதனால் 120 கோடி மக்களும் பயனடைவார்கள் என்றும் குறிப்பிட்டார். அதிமுக உறுப்பினர் வெங்கடேஷ் பாபு பேசுகையில், 'ஜிஎஸ்டி வரி விதிப்பானது, சுதந்திரத்துக்குப் பிறகு வரி விதிப்பில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தம்; எனினும் அதை செயல்படுத்துவதில் பல்வேறு சவால்கள் இருக்கின்றன' என்றார்.
  திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி பேசுகையில், 'கொள்கை ரீதியில் ஜிஎஸ்டியை மேற்கு வங்க அரசு ஆதரிக்கிறது; எனினும், ஜிஎஸ்டியை செயல்படுத்த மத்திய அரசு அவசரப்படுவதுதான் கவலையளிக்கிறது' என்றார்.
  பிஜு ஜனதா தளம் எம்.பி. பர்த்ருவாரி மகதாப் பேசுகையில், 'ஜிஎஸ்டி மீது அதிகளவு எதிர்பார்ப்பு வைப்பது வெறும் மாயை' என்றார். சிவசேனை எம்.பி. ஆனந்த்ராவ், தெலுங்கு தேசம் எம்.பி. ஜெயதேவ் கல்லா, தெலங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி. கொண்டா விஷ்வேஸ்வர் ரெட்டி ஆகியோர் ஜிஎஸ்டி மசோதாவை ஆதரித்துப் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. முகமது சலீம், நாடாளுமன்றத்தை ஜிஎஸ்டி கவுன்சில் மூலம் இடமாற்றம் செய்வதாக விமர்சித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai