சுடச்சுட

    
    jetly

    விலைவாசியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில், சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்கள் கட்டுக்குள் வைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
    சரக்கு-சேவை வரி விதிப்புக்குப் பிறகு, விலைவாசி உயரும் என்ற அச்சம் எழுந்துள்ள சூழலில், அதைப் போக்கும் விதமாக ஜேட்லி இவ்வாறு கூறினார்.
    மத்திய சரக்கு-சேவை வரி மசோதா (சிஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி மசோதா (ஐஜிஎஸ்டி), யூனியன் பிரதேச சரக்கு-சேவை வரி மசோதா (யுடிஜிஎஸ்டி), ஜிஎஸ்டி-யால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி இழப்பை ஈடு செய்யும் மசோதா ஆகிய 4 துணை மசோதாக்களையும் மக்களவையில் அருண் ஜேட்லி கடந்த திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
    இந்நிலையில், இந்த துணை மசோதாக்கள் மீதான விவாதம், மக்களவையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்து ஜேட்லி பேசியதாவது: மத்திய ஜிஎஸ்டி மசோதாவானது, மத்திய அரசு வரி விதிப்பதற்கும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மசோதாவானது, மத்திய அல்லது மாநில அரசுகள் வரி விதிப்பதற்கும் அதிகாரம் அளிக்கிறது.
    மாநில ஜிஎஸ்டி சட்டத்தை மாநில அரசுகள் நிறைவேற்றிக் கொள்ளும். இதுதவிர, ஜிஎஸ்டி வரி விதிப்பால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்காக, ஆடம்பர கார்கள், விலையுயர்ந்த புகையிலைப் பொருள்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றுக்கு வரி விதிக்க ஜிஎஸ்டி இழப்பீடு மசோதா வகை செய்கிறது.
    இந்தியாவை ஒரே வரி விதிப்பு முறை கொண்ட சந்தையாக மாற்றுவதற்கு, இந்த நான்கு துணை மசோதாக்களும் நாடாளுமன்றத்திலும், ஒவ்வொரு மாநில சட்டப் பேரவைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும். வரி விதிப்பு தொடர்பான விஷயங்களை முடிவு செய்வதற்காகவே, ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் இறையாண்மை கொள்கைகளின் அடிப்படையில் இதுபோன்ற ஒரு கவுன்சில் அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பான அனைத்து முடிவுகளையும், கூட்டாட்சித் தத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்கும்.
    ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் ஒருமித்த முடிவை எட்டுவதற்காக, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் 32 பிரதிநிதிகளைக் கொண்ட ஜிஎஸ்டி கவுன்சில், இதுவரை 12 முறை கூடி விவாதித்துள்ளது. நாடாளுமன்ற வரலாற்றில் ஜிஎஸ்டி மசோதா, ஒரு மைல் கல்லாகும் என்றார் அருண் ஜேட்லி.

    ஜிஎஸ்டி துணை மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம்
    சரக்கு-சேவை வரியின் (ஜிஎஸ்டி) நான்கு துணை மசோதாக்களும் மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டன.
    இந்த மசோதாக்களை நிறைவேற்றுவது தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை 7 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. அப்போது, மசோதாவில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.
    நாடு முழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் நோக்கில் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai