சுடச்சுட

    

    'தேசியக் கொடி படத்துடன் கூடிய பொருள்களின் விற்பனையை தடுக்க சர்வதேச சட்டம் இல்லை'

    By DIN  |   Published on : 30th March 2017 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    MJAKBAR

    இந்திய தேசியக் கொடி படத்துடன் கூடிய பொருள்கள், இதர நாடுகளில் விற்கப்படுவதைத் தடுக்க சர்வதேச அளவில் சட்டமோ, ஒப்பந்தமோ இல்லை' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    முன்னதாக, இணையவழி வர்த்தக நிறுவனமான அமேஸான், கனடாவில் இந்திய தேசிய கொடி போன்ற கால் மிதியடிகளை விற்பனை செய்து வருவது அண்மையில் தெரியவந்தது.
    இதைத் தொடர்ந்து, அமேஸான் நிறுவனத்துக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்னர், சர்ச்சைக்குரிய அந்த பொருள்களை, அமேஸான் நிறுவனம் திரும்பப் பெற்றது.
    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்து, வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் கூறியதாவது:
    இந்திய தேசியக் கொடியுடன் கூடிய பொருள்கள், இதர நாடுகளில் விற்கப்படுவதைத் தடுப்பதற்கான சர்வதேச சட்டமோ, ஒப்பந்தமோ இல்லை. ஆனால், இந்தியாவில் அதுபோன்ற பொருள்கள் விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட இணையவழி வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்வதற்கான விதிமுறைகளும், சட்டங்களும் உள்ளன என்றார் அவர்.
    இதனிடையே, சத்தீஷ்கர் மாநிலத்தில் 'தூய்மை இந்தியா' திட்டத்தை பிரபலப்படுத்துவதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் குப்பைத் தொட்டியில் மகாத்மா காந்தி படம் ஒட்டப்பட்டது தொடர்பாக உறுப்பினர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த எம்.ஜே.அக்பர், 'சட்டத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும்' என்றார்.
    ஒரே சீரான விதிமுறைகள் வேண்டும்: விமானங்களில் மடிக்கணினி, டேப்லெட் உள்ளிட்ட மின்னணு பொருள்களை பயணிகள் எடுத்துச் செல்வதற்கு ஒரே சீரான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. விவேக் குப்தா வலியுறுத்தியுள்ளார்.
    மாநிலங்களவையில் புதன்கிழமை உடனடி கேள்வி நேரத்தின்போது, இந்த விவகாரத்தை எழுப்பி அவர் பேசியதாவது:
    விமானங்களில் மடிக்கணினி, டேப்லெட் உள்ளிட்ட மின்னணு பொருள்களை எடுத்துச் செல்வதற்கு ஒவ்வொரு விமான நிறுவனமும் ஒவ்வொருவிதமான விதிமுறைகளை வைத்துள்ளன. இதனால், பயணிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் ஒரே சீரான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai