Enable Javscript for better performance
தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க விருப்பம்: மக்களவையில் மத்திய அரசு தகவல்- Dinamani

சுடச்சுட

  

  தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க விருப்பம்: மக்களவையில் மத்திய அரசு தகவல்

  By DIN  |   Published on : 30th March 2017 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jitender

  தமிழகத்தின் தேனி மாவட்டம் மேற்கு போடி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு விரும்புகிறது என்று பிரதமர் அலுவலகத்துக்கான மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
  இது தொடர்பாக மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக ஜிதேந்திர சிங் புதன்கிழமை அளித்துள்ள பதில் வருமாறு:
  2010-இல் மக்கள் கூட்டம்: தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு போடி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு விரும்புகிறது.
  இத்திட்டத்துக்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிக்காக மத்திய அரசு காத்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக நிபுணர் குழுவை அமைத்து அதன் கருத்து அடிப்படையில் முடிவெடுப்பதற்காக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் காத்திருக்கிறது.
  2010, ஜூலை 8-இல் தேனி மாவட்ட ஆட்சியர் மூலம் நியூட்ரினோ ஆய்வகம் திட்டம் தொடர்பாக மக்கள் கருத்தறியும் கூட்டம் நடைபெற்றது. சுமார் 1,200 பேர் அடங்கிய உள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், பஞ்சாயத்து உறுப்பினர்கள், உள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர்கள், காவல் துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். வாய்மொழியாக உள்ளூர் மக்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மூத்த விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர். இதையடுத்து, கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நியூட்ரினோ திட்டத்துக்கான ஒப்புதலை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
  திட்டத்துக்கு எதிர்ப்பு இல்லை: இது தவிர, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் அருகில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டன. மதுரை, தேனியில் முகாமிட்டிருந்த நியூட்ரினோ ஆய்வக திட்டக் குழுவினரும் அடிக்கடி பொட்டிபுரம் பகுதிக்குச் சென்று பகுதிவாசிகளிடம் பேசி வந்தனர். தற்போதைய நிலையில் நியூட்ரினோ ஆய்வகத்தை வேறு இடத்துக்கு மாற்றும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை.
  மேலும், ஆய்வகத்துக்கு எதிராக உள்ளூர், அண்டை மாநிலத்திடம் இருந்தும் ஆட்சேபம் தெரிவித்து மனுக்கள் வரவில்லை. அதே சமயம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரையில் உள்ள சென்னை உயர் நீதிமன்ற கிளையிலும், ஜி.சுந்தர்ராஜன் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல சென்னை கிளையிலும் வழக்குத் தொடுத்துள்ளனர்.
  இரு வழக்குகள்: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கோரி 2015, மே 22-இல் செய்த விண்ணப்பம் நிலுவையில் உள்ளதால் ஆய்வகத் திட்டத்தை தொடங்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. சில தினங்களுக்கு முன்புதான் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நிபுணர் குழுவை அமைத்து திட்டம் பற்றி ஆலோசித்து வருகிறது.
  இதேபோல, மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கிய சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்கான அனுமதி காலாவதியாகி விட்டதால், அதை ரத்து செய்வதாக அறிவித்து புதிதாக விண்ணப்பிக்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அண்மையில் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது என்று இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai