சுடச்சுட

  

  மாநிலங்களவையில் நிதி மசோதா நிறைவேறியது: எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த 5 திருத்தங்கள் ஏற்பு

  By DIN  |   Published on : 30th March 2017 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிதி மசோதா புதன்கிழமை நிறைவேறியது. அப்போது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த 5 திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
  எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட 5 திருத்தங்களில், 3 திருத்தங்கள் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கால் கொண்டு வரப்பட்டவை. எஞ்சிய 2 திருத்தங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியால் கொண்டு வரப்பட்டவை ஆகும்.
  இந்த 5 திருத்தங்களும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மாநிலங்களவையால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
  அதாவது, 27 மற்றும் 34 வாக்குகள் வித்தியாசத்தில் திருத்தங்களுக்கு ஒப்புதல் கிடைத்தது. மாநிலங்களவையில் 10 உறுப்பினர்களைக் கொண்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி, வாக்கெடுப்புக்கு முன்னதாக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.
  245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் பாஜக எம்.பி.க்கள் 56 பேரையும் சேர்த்து, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தம் 74 உறுப்பினர்களே உள்ளனர். எதிர்க்கட்சிகளுக்கே அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் உள்ளனர். இதனால், நிதி மசோதா மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த 5 திருத்தங்களுக்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஒப்புதல் கிடைத்தது.
  ஜேட்லி-ப.சிதம்பரம் இடையே வாக்குவாதம்: முன்னதாக, நிதி மசோதா மீதான விவாதத்துக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதிலளித்துப் பேசியபோது, பல்வேறு நலத் திட்டங்களுக்கும் ஆதாரைக் கட்டாயமாக்கும் மத்திய அரசின் திட்டத்தை நியாயப்படுத்தினார். வரி ஏய்ப்பு உள்பட பல்வேறு மோசடிகளைத் தடுப்பதற்கு ஆதார் அவசியம் என்று அவர் தெரிவித்தார்.
  இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட சிறந்த திட்டம் ஆதார் ஆகும். அதை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் விரிவுபடுத்தியுள்ளது. ஆதார் தொடர்பாக முன்பு சில சந்தேகங்கள் இருந்தன. காங்கிரஸ் கட்சியினருக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்தபிறகு, அந்தச் சந்தேகம் நீங்கிவிட்டது. பொது நலனுக்காகவே ஆதார் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் அந்த தொழில்நுட்பத்தை பயன்பாட்டுக்கு ஏன் கொண்டு வரக்கூடாது? என்றார்.
  அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் குறுக்கிட்டு, ஆதார் தகவல் கசியாது என்று மத்திய அரசால் வாக்குறுதி அளிக்க முடியுமா? என்றார். இதற்கு அருண் ஜேட்லி பதிலளிக்கையில், 'ஆதாரில் ஊடுருவல் நடைபெறுவதை மறுப்பதற்கில்லை. தடுப்பு அரண்களை வலுமிக்கதாக உருவாக்க வேண்டும்' என்றார்.
  கிரிக்கெட் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனியின் ஆதார் தகவல் கசிந்தது குறித்து கேட்டபோது, 'ராஞ்சியைச் சேர்ந்த பக்குவமில்லாத சிலரே அதற்குக் காரணம்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை காரணமாக வைத்து, அந்த தொழில்நுட்பத்தை சிறுமைப்படுத்தக் கூடாது' என்றார் ஜேட்லி.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai