சுடச்சுட

    

    மாவட்ட நீதிமன்றங்களில் சிசிடிவி கேமராக்கள்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 30th March 2017 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    supreme_court

    வழக்கு விசாரணையில் வெளிப்படைத்தன்மை இருப்பதை உறுதிசெய்யும் வகையில், ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தபட்சம் 2 மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிரத்யுமன் பிஷ்ட் என்பவர் வழக்குத் தொடுத்திருந்தார். அதில், கீழமை நீதிமன்றங்களில் வழக்குகள் நேர்மையான முறையில் விசாரிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
    இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.கே. கோயல், யு.யு. லலித் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
    ஒவ்வொரு மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும் குறைந்தபட்சம் 2 மாவட்ட நீதிமன்றங்களிலாவது சிசிடிவி கேமராவைப் பொருத்த வேண்டும் என்று உத்தரவிடுகிறோம். நீதிமன்ற அறைக்குள்ளேயும், நீதிமன்ற வளாகத்தின் முக்கியப் பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும். எந்த மாவட்ட நீதிமன்றத்தில் கேமராவைப் பொருத்த வேண்டும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட மாநிலத்தின் உயர் நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும்.
    மாவட்ட நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றங்களில் 3 மாத காலத்துக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதை உயர் நீதிமன்றங்கள் உறுதிசெய்ய வேண்டும். ஆனால், அதில் உரையாடலைப் பதிவு செய்யும் வசதி இருக்கக் கூடாது. வழக்கு விசாரணைக் காட்சிகளை தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் கோர முடியாது. அந்தக் காட்சி உயர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி யாருக்கும் நீதிமன்றங்கள் அளிக்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai