சுடச்சுட

    

    முன்னாள் கர்நாடக முதல்வர்கள் மீதான முறைகேடு வழக்கு: எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவு

    By DIN  |   Published on : 30th March 2017 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    supreme_court

    கர்நாடக முன்னாள் முதல்வர்கள் என். தரம் சிங், ஹெச்.டி. குமாரசாமி ஆகியோருக்கு எதிரான இரும்புத் தாது சுரங்க முறைகேடு வழக்கு குறித்து விசாரணை நடத்துமாறு சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு (எஸ்ஐடி) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    அதேசமயத்தில், கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா தொடர்பான முறைகேட்டு வழக்கை விசாரிப்பதற்கான இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் மேலும் நீட்டித்திருக்கிறது. கர்நாடக முதல்வர்களாக எஸ்.எம். கிருஷ்ணா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தரம் சிங், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த ஹெச்.டி. குமாரசாமி ஆகியோர் பதவி வகித்த காலகட்டங்களில், இரும்புத் தாது சுரங்க ஒப்பந்தங்களில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    மேலும், இரும்புத் தாது சுரங்கங்களுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி நிலங்கள் முறைகேடாக கையகப்படுத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
    இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கானது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி.கோஸ், ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
    அப்போது, இரும்புத் தாது சுரங்க முறைகேடு தொடர்பாக என். தரம் சிங், ஹெச்.டி. குமாரசாமி ஆகியோர் தொடர்புடைய வழக்குகளை கர்நாடக காவல்துறையின் எஸ்ஐடி அமைப்பினர் விரைந்து விசாரித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    அதேசமயத்தில், எஸ்.எம். கிருஷ்ணா தொடர்புடைய வழக்கில் விசாரணை நடத்துவதற்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீதிபதிகள் மேலும் நீட்டித்து உத்தரவிட்டனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான எஸ்.எம். கிருஷ்ணா, அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் அண்மையில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai