சுடச்சுட

    

    பி.எஸ்.III வாகனங்கள் விற்பனை, பதிவுக்குத் தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 30th March 2017 05:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    car

     

    பாரத் ஸ்டேஜ் என்று அழைக்கப்படும் பி.எஸ்.-III புகை மாசுக் கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் தயாரிக்கப்பட்ட வாகனங்களை ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு விற்பனை செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்தது.
    இந்தியாவில் உள்ள வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் பி.எஸ்.-III புகை மாசு விதிகளின் கீழ் தயாரித்த 8.24 லட்சம் வாகனங்களை இன்னும் விற்பனை செய்யாமல் வைத்துள்ளன. எனவே, அந்த நிறுவனங்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    காற்று மாசைக் குறைக்கும் விதி: சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை பெரும் பங்கு வகிக்கிறது. அவற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு உள்பட்ட பி.எஸ்.-III மாசுக் கட்டுப்பாட்டு விதிகளின்கீழ் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் இப்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
    ஏப்ரல் 1 முதல்...: இந்நிலையில், வாகனப் புகை மாசுபாட்டை மேலும் குறைக்கும் வகையிலான வாகன இன்ஜின்களைத் தயாரிக்கும் வகையில் பி.எஸ்.-ஐய விதி வகுக்கப்பட்டது. இந்தப் புதிய விதிமுறை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.
    இந்நிலையில், பி.எஸ்.-ஐய விதிகளுக்குள் வராத வாகனங்களின் விற்பனையையும், அவற்றின் பதிவினையும் ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பில் இருந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
    ரூ.20,000 கோடி மதிப்பு: இதையடுத்து, வாகன உற்பத்தி நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'பி.எஸ்.-ஐய விதிகளின் கீழ் வராமல், ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட 8.24 லட்சம் வாகனங்கள் (96,724 வர்த்தக வாகனங்கள், 6.71 லட்சம் இருசக்கர வாகனங்கள், சுமார் 40,048 மூன்று சக்கர வாகனங்கள், 16,198 கார்கள் உள்ளிட்டவை) தங்கள் தொழிற்சாலைகளிலும், விற்பனையகங்களிலும் உள்ளன. ரூ.20,000 கோடி மதிப்புள்ள அந்த வாகனங்களை விற்பனை செய்யும் வரை புதிய விதிகளை அமல்படுத்துவதைக் கட்டாயமாக்கக் கூடாது' என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
    'மக்கள் நலன்தான் முக்கியம்': இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
    வாகன உற்பத்தி நிறுவனங்களின் வர்த்தக நலன்களைவிட பொதுமக்களின் உடல்நலனைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. அதிக அளவு காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் வாகனங்களை இனிமேலும் சாலைகளில் அனுமதிக்க முடியாது.
    பி.எஸ்.-ஐய விதிகள் ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வர இருக்கின்றன என்பது குறித்து முன்பே தெரிந்திருந்தும், அந்த விதிகளைப் பின்பற்றி வாகனங்களைத் தயாரிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    எனவே, அவர்களது கோரிக்கையை நிராகரிக்கிறோம். எனவே பி.எஸ்.-III விதிகளின்படி தயாரிக்கப்பட்ட வாகனங்களை ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து விற்பனை செய்யவோ, பதிவு செய்யவோ கூடாது என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
    வாதத்தை ஏற்க மறுப்பு: மேலும், 'ஏப்ரல் 1-ஆம் தேதி என்பது அந்த வகை வாகனங்களை உற்பத்தி செய்வதை நிறுத்துவதற்கான நாள்தானே தவிர அதனை விற்பனை மற்றும் பதிவு செய்வதை நிறுத்துவதற்கான நாள் அல்ல. பி.எஸ்.-II இல் இருந்து பி.எஸ்.-III விதிக்கு மாறும்போது இந்த முறைதான் கடைபிடிக்கப்பட்டது' என்ற ஹீரோ மோட்டோகார்ப், டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் முன்வைத்த வாதத்தையும் நீதிமன்றம் ஏற்கவில்லை.
    மாசடையும் இந்திய நகரங்கள்: இந்த வழக்கில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், உலகிலேயே காற்று மாசுபாடு அதிகமுள்ள முதல் 20 நகரங்களின் பட்டியலில் 10 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன என்று சுட்டிக்காட்டப்பட்டது.
    வாகன நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆதரவு: இந்த வழக்கில் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் கருத்து தெரிவித்தார். நீதிமன்றத்தில் அவர் கூறியதாவது:
    இதற்கு முன்பு 2010 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் வாகனப் புகைக் கட்டுப்பாட்டுக்கான புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டபோது, பழைய விதிகளின் கீழ் வாகனங்களைத் தயாரிப்பது நிறுத்தப்பட்டது. ஆனால், ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட வாகனங்களை விற்க அனுமதிக்கப்பட்டது என்றார் அவர்.
    இதனிடையே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai