சுடச்சுட

  

  ஹைட்ரோ கார்பன் திட்ட பிரச்னையில் மத்திய அரசு இரட்டை வேடம்

  By DIN  |   Published on : 30th March 2017 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  stalin

  ஹைட்ரோ கார்பன் திட்ட பிரச்னையில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
  சென்னை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அளித்த பேட்டி:
  இரட்டை வேடம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் முதல்வரும் அமைச்சர்களும் வாக்குறுதி அளித்தனர்.
  ஜல்லிக்கட்டுப் பிரச்னைக்கு சட்டப்பேரவையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது போல சிறப்புத் தீர்மானம் ஒன்றை சட்டப்பேரவையில் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன்.
  அதற்கு எந்தவிதப் பதிலும் சொல்லாமல் மெளனமாக இருந்து விட்டனர். இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக தனியார் நிறுவனங்களோடு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டிருக்கிறது என்ற செய்தி அதிர்ச்சியாக உள்ளது.
  இந்த விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. அதற்கு மாநில அரசு துணை போகிறது.
  முக்கியமான தேர்தல்: திமுகவின் செயல்தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு நான் சந்திக்கும் முதல் இடைத்தேர்தலை முக்கியமானதாகவே கருதுகிறேன். தேர்தல் ஆணையம் நியாயமாக நடக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
  கவலையற்ற அரசு: விவசாயிகள் தமிழகத்தில் போராடி வந்ததைப் பற்றி இந்த அரசு கவலைப்படாத காரணத்தால் நேரடியாக தில்லி மாநகரத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் இரண்டு வார காலத்துக்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.
  இந்தப் போராட்டம் குறித்து மத்திய அரசு இதுவரை கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுவரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை நேரடியாகச் சந்தித்துப் பேசவில்லை என்பது வேதனைப்பட வேண்டிய ஒன்று. தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடிய விவசாய மக்களுக்கு நிவாரண நிதியைக் கூட வழங்க முடியாத நிலையில்தான் அதிமுக அரசு உள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai