இந்திய மீனவர்கள் விவகாரம் மீது அறிக்கை அளிக்கத் தயார்: மாநிலங்களவையில் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி
Published on : 31st March 2017 02:29 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

இலங்கை, பாகிஸ்தான் படைகளால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் விவகாரம் மீது எப்போது வேண்டுமானாலும் அறிக்கை அளிக்கத் தயார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை முக்கிய பிரச்னைகளை அவையின் கவனத்துக்குக் கொண்டு வரும் நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் அகமது படேல் பேசினார்.
அப்போது அவர், 'இலங்கை, பாகிஸ்தான் கடற்படையினர், கடலோரக் காவல் படையினரால் இந்திய மீனவர்கள் அடிக்கடி கைது நடவடிக்கைக்கு ஆளாகின்றனர்.
அவர்களுக்கு சொந்தமான படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
இரு நாடுகளிலும் இதுவரை 300 பேர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமான படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்திய மீனவர்களையும் அவர்களுக்குச் சொந்தமான படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கைவசம் இருந்த படகுகள் போதுமான பராமரிப்பின்றி சேதப்படுத்தப்பட்டுள்ளதால் இந்திய மீனவர்கள் புதிய படகுகளை வாங்க மத்திய அரசு கடனுதவி செய்ய வேண்டும்.
இது மிகவும் தீவிரமான பிரச்னை என்பதால் இது பற்றி மத்திய அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்' என்றார்.
இதையடுத்து, அவையில் இருந்த சுஷ்மா ஸ்வராஜ், 'இது போன்ற விவகாரத்தை ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் எழுப்பிய போது எனது தரப்பு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனினும், உறுப்பினர்கள் விரும்பினால், அண்டை நாடுகளில் சிறைப்பிடிக்கப்படும் மீனவர்கள் விவகாரம் பற்றி மீண்டும் விளக்கம் அளிக்கத் தயாராக இருக்கிறேன்.
அதற்கான நேரத்தை மாநிலங்களவைத் தலைவரோ, துணைத் தலைவரோ ஒதுக்க வேண்டும்' என்றார்.
இதைக் கேட்ட மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன், 'இந்த விவகாரத்தை விளக்குவதற்கு மத்திய அரசுக்கு அவைத் தலைவர் அனுமதியுடன் நேரம் ஒதுக்க பரிசீலிக்கப்படும்' என்றார்.