சுடச்சுட

  

  உ.பி.யில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: 52 பேர் காயம்

  By DIN  |   Published on : 31st March 2017 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rail1

  உத்தரப் பிரதேச மாநிலம், மஹோபாவில் தடம் புரடண்டு விபத்துக்குள்ளான மஹாகெளசல் விரைவு ரயிலில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் மீட்புக் குழுவினர்.

  உத்தரப் பிரதேச மாநிலம், மஹோபா மாவட்டத்தில் ஜபல்பூர்-நிஜாமுதீன் மஹாகெளசல் விரைவு ரயில் வியாழக்கிழமை அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 8 ரயில் பெட்டிகள் சேதமடைந்தன.
  இந்த விபத்தில் 52 பயணிகள் காயமடைந்துள்ளனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தால், அந்த வழித்தடத்தில் செல்லும் 14 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
  இந்த விபத்து குறித்து, லக்னெளவில் காவல் துறை ஏடிஜிபி தல்ஜித் செளதரி கூறியதாவது: இந்த விபத்து வியாழக்கிழமை அதிகாலை 2.20 மணிக்கு ஏற்பட்டுள்ளது. காயமடைந்த 52 பேரில், 2 பேருக்கு அதிக அளவில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், ஜான்சியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிலர் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர். மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  இந்த விபத்துக்கான முகாந்திரம் எதுவும் தெரியவில்லை. எனினும், விபத்து குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும்.
  விபத்துக்கான காரணத்தை கண்டறிய, ரயில்வே அதிகாரிகளும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், பயங்கரவாத தடுப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர் என்றார் அவர்.
  மீட்புப் பணி: விபத்துக்குப் பிறகு, எஞ்சிய 10 பெட்டிகளுடன் காலை 6.48 மணிக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது. சேதமடைந்த பெட்டிகளில் வந்த 200 பயணிகள், 15 பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்து குறித்து பயணிகளின் உறவினர்கள் தெரிந்துகொள்வதற்காக, 17 அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  உ.பி அரசு நிவாரணம்: இதனிடையே, உத்தரப் பிரதேச மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சித்தார்த்நாத் சிங், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் நிவாரணம் அளிக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
  ரயில்வே நிவாரணம் அறிவிப்பு: இதேபோல, ரயில்வே துறையும் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் நிவாரணமாக அறிவித்துள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் விசாரணை நடத்துவார் என்று ரயில்வே வாரிய உறுப்பினர் முகமது ஜாம்ஷெட், தில்லியில் கூறினார்.
  தண்டவாள விரிசலே காரணம்: இதனிடையே, தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசலே ரயில் விபத்துக்கு காரணம் என்று மத்திய ரயில்வே இணையமைச்சர் மனோஜ் சின்ஹா, தில்லியில் தெரிவித்தார்.
  பாதுகாப்பு அம்சங்கள்: விபத்துக்குள்ளான ரயிலில் தடம் புரண்டு சேதமடைந்த பெட்டிகள் அனைத்தும் சென்னையில் உள்ள ஐ.சி.எஃப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவையாகும். விபத்தின்போது சில பெட்டிகள் தடம் புரண்டபோதிலும், அவை ஒன்றின் மீது ஒன்று ஏறிக்கொள்ளாத வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனால் குறைந்த அளவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai