சுடச்சுட

    

    சொத்து குவிப்பு வழக்கு தண்டனை: கர்நாடக மனு மீது ஏப்.5 விசாரணை

    Published on : 31st March 2017 02:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மறுஆய்வு மனு மீது வரும் ஏப்ரல் 5-இல் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தும் என்று தெரிகிறது.
    இது தொடர்பாக கர்நாடக அரசு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில், 'சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு விசாரணை நீதிமன்றம் விதித்துள்ள தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
    அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜெயலலிதா உயிரிழந்து விட்டார். எனவே, அவருக்கான தண்டனையை நீக்குவதாகக் குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம், விசாரணை நீதிமன்றம் அவருக்கு விதித்துள்ள ரூ.100 கோடி அபராதத்தை எவ்வாறு வசூலிப்பது என்பதை தீர்ப்பில் தெளிவுபடுத்தவில்லை.
    எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தெளிவான உத்தரவை வழங்கும் வகையில் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்' என்று கோரியிருந்தது.
    இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு ஏப்ரல் 5-ஆம் தேதி பிற்பகலில் பரிசீலிப்பர் என்று நீதிமன்றப் பதிவாளர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. மறு ஆய்வு மனு என்பதால் இந்த வழக்கை நீதிபதிகள் அமர்வில் மூத்த நீதிபதியான பினாகி சந்திரகோஸ் தனது அறையில் விசாரித்து முடிவை அறிவிப்பார் எனத் தெரிகிறது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai