சுடச்சுட

  

  நாடாளுமன்றத்தில் நிதி மசோதா நிறைவேற்றம்: எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் நிராகரிப்பு

  By DIN  |   Published on : 31st March 2017 04:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  arunjetly

  மக்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிதி மசோதா மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.

  நிகழாண்டுக்கான நிதி மசோதா நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேறியது. மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதில் சில திருத்தங்களைக் கொண்டுவந்த போதிலும், மக்களவையில் அவை நிராகரிக்கப்பட்டதால் குரல் வாக்கெடுப்பு முறை மூலம் நிதி மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
  மக்களவையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதா பல்வேறு விமர்சனங்களுக்கு அடித்தளமிட்டது. அதிரடியான சில அம்சங்களும், சட்டத் திருத்தங்களும் அதில் இடம்பெற்றிருந்ததே அதற்குக் காரணம்.
  குறிப்பாக, வருமான வரித் துறையினர் எந்த விதமான காரணமும் தெரிவிக்காமல் சோதனை நடத்துவதற்கு அதில் புதிய சட்டம் வகுக்கப்பட்டிருந்தது. மேலும், அரசியல் கட்சிகளுக்கு பெரு நிறுவனங்கள் வழங்கும் நன்கொடைக்கான உச்ச வரம்பை ரத்து செய்தும், தேர்தல் நிதி முதலீட்டுப் பத்திரங்கள் வாயிலாக பெயர் வெளியிடாமல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கவும் மசோதாவில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
  இந்த அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. நிகழாண்டுக்கான நிதி மசோதாவில் வருமான வரித் துறையினருக்கு அளிக்கப்பட்டிருக்கும் கூடுதல் அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும்; தொழில் நிறுவனங்கள், தங்களது நிகர லாபத்தில் 7.5 சதவீதத்துக்கு மேல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதைத் தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 5 திருத்தங்களை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
  இந்தத் திருத்தங்கள், எதிர்க்கட்சிகள் பலம் அதிகம் உள்ள மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டன.
  எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: மக்களவையின் ஒப்புதலுக்காக அந்தத் திருத்தங்கள் அனுப்பப்பட்டன. அவற்றின் மீதான விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் உறுப்பினர் தீபேந்தர் ஹூடா பேசியதாவது:
  இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் எந்த ஒரு நிதி மசோதாவிலும் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று மாநிலங்களவை வலியுறுத்தியதில்லை. ஆனால், இம்முறை அப்படி ஒரு சூழலை மத்திய பாஜக அரசு உருவாக்கியுள்ளது.
  நிதி மசோதாவின் வாயிலாக 40 சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பண மசோதாவாக அவை அனைத்தையும் கொண்டுவந்ததன் காரணமாக, மாநிலங்களவையின் ஒப்புதல் இல்லாமலேயே அவற்றை நிறைவேற்ற முடிகிறது. கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதில் தொழில் நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டிருப்பது அரசியல் கொள்ளைக்கு வழிவகுக்கும் என்றார் அவர்.
  இதைத்தொடர்ந்து பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுகதா ராய், 'வருமானவரித் துறையினருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியிருப்பது மிகப்பெரிய பாதகங்களுக்கு வழிவகுக்கும்; இத்தகைய நடவடிக்கைகள் தனி நபர் உரிமைகளுக்கு எதிரானவை' என்றார்.
  இந்த விவகாரம் குறித்து பிஜூ ஜனதா தள உறுப்பினர் பர்த்ருஹரி மஹதாப் பேசுகையில், 'வருமான வரித் துறைச் சட்டம் 1961-இன் படி, வருமான வரிச் சோதனைக்கு உள்ளாகும் நபரிடம் அதுதொடர்பான காரணத்தை தெரிவிக்க வேண்டியது அவசியம்; ஆனால், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்திருத்தம் அதற்கு நேர்மாறாக உள்ளது' என்றார்.
  ஜேட்லி விளக்கம்: நிதி மசோதாவில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் மீதான விவாதத்தை நிறைவு செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் தெரிவித்த கருத்து:
  வருமான வரித் துறைக்குத் தகவல் தெரிவிக்கும் இடித்துரைப்பாளர்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதன் அடிப்படையிலேயே சட்டத் திருத்தங்களில் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வருமான வரிச் சோதனைக்கு ஆளாகும் நபரிடம், சோதனை தொடர்பான அறிக்கையை (Satisfaction Note)  வழங்கும் முறை இதுவரை கடைப்பிடிக்கப்படவில்லை. எனவே, அதே நடைமுறையே வருங்காலங்களில் தொடரும்.
  அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ரூ.2 ஆயிரத்துக்கு மேற்பட்ட நன்கொடைகளை வழங்குபவர்களின் பெயர் மற்றும் விவரங்களைத் தெரிவிப்பது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  தேர்தல் முதலீட்டுப் பத்திர நடைமுறையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஏதேனும் பிரச்னை இருந்தால், காசோலையாகவோ அல்லது இணையவழி பணப் பரிவர்த்தனையாகவோ நன்கொடைகளைப் பெற்றுக் கொள்ளட்டும் என்றார் அவர்.
  இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் முன்மொழிந்த 5 திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டு, குரல் வாக்கெடுப்பு முறை மூலம் நிதி மசோதா நிறைவேறியது.
  முன்கூட்டியே நிறைவு: எதிர்வரும் நிதியாண்டுக்கான (2017-18) பட்ஜெட் அறிவிப்புகளைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் நிகழாண்டில் முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக பிப்ரவரி இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதன் காரணமாக, நிதியாண்டின் தொடக்கத்திலேயே (ஏப்.1) பட்ஜெட் அறிவிப்புகளை அமலாக்க இயலாத சூழல் இருந்து வந்தது. அதைக் கருத்தில்கொண்டு, வழக்கத்துக்கு மாறாக நிகழாண்டில் பிப்ரவரி 1-ஆம் தேதியே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, அறிவிப்புகளை அமலாக்குவதற்கான நடவடிக்கைகளும் முன்கூட்டியே நிறைவு செய்யப்பட்டன. இதன் விளைவாக வரும் 1-ஆம் தேதி முதலே பட்ஜெட் அறிவிப்புகள் அமலுக்கு வரத் தொடங்கும் நிலை உருவாகியுள்ளது.
  கட்சிகளுக்கு நன்கொடை: ஆலோசனைகள் வரவேற்பு
  அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்கு சிறந்த ஆலோசனைகள் இருந்தால் வழங்கலாம் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்களை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கேட்டுக் கொண்டார்.
  நிதி மசோதாவில் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சில சட்டத் திருத்தங்களை எதிர்க்கட்சிகள் விமர்சித்ததைத் தொடர்ந்து இந்தக் கருத்தை அவர் கூறினார். இதுதொடர்பாக மக்களவையில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
  நன்கொடை வழங்கும் வழிமுறைகளை முறைப்படுத்த சிறந்த திட்டங்கள் இருந்தால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தெரிவிக்கலாம். அவை குறித்து பரிசீலிக்கப்படும் என்றார் அவர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai