Enable Javscript for better performance
நியமன எம்.பி.க்கள் தொடர்ந்து அவைக்கு வராமல் இருக்கலாமா? மாநிலங்களவையில் காரசார விவாதம்- Dinamani

சுடச்சுட

    

    நியமன எம்.பி.க்கள் தொடர்ந்து அவைக்கு வராமல் இருக்கலாமா? மாநிலங்களவையில் காரசார விவாதம்

    By DIN  |   Published on : 31st March 2017 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ''மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்கள் தொடர்ந்து அவைக்கு வராமல் இருக்கலாமா?'' என்று சமாஜவாதி எம்.பி. நரேஷ் அகர்வால், மாநிலங்களவையில் வியாழக்கிழமை ஒழுங்குப் பிரச்னை எழுப்பினார்.
    நியமன உறுப்பினர்களான பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், ஹிந்தி நடிகை ரேகா ஆகியோர் மாநிலங்களவைக்கு தொடர்ந்து வராததை சுட்டிக்காட்டி நரேஷ் அகர்வால், இவ்வாறு ஒழுங்குப் பிரச்னையை எழுப்பினார்.
    மேலும், ''நியமன எம்.பி.க்கள் தொடர்ந்து அவைக்கு வரவில்லையெனில், அவர்களுக்கு பதவியில் நீடிக்க விருப்பமில்லை என்றுதானே அர்த்தம்; அப்படியிருக்கும்போது, அவர்கள் பதவி விலகாமால் இருக்கலாமா?'' என்றும் நரேஷ் அகர்வால் கேள்வியெழுப்பினார்.
    அதற்குப் பதிலளித்த மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன், ''இது, ஒழுங்கு பிரச்னை கிடையாது; நரேஷ் அகர்வால், அவைக்கு வராத உறுப்பினர்களிடம் பேசி, அடுத்த சில நாள்களில் அவைக்கு வரவழைக்க முடியும்'' என்றார்.
    அப்போது, அவைத் தலைவர் கூறியதற்கிணங்க, அவைக்கு வராத உறுப்பினர்களுக்கு கடிதம் எழுத இருக்கிறேன் என்று நரேஷ் அகர்வால் கூறினார். பின்னர், அவை அமைதியானது.
    சச்சின் டெண்டுகர், ரேகா தவிர, அனு ஆகா, சாம்பாஜி சதிரபதி, ஸ்வபன் தாஸ்குப்தா, ரூபா கங்குலி, நரேந்திர யாதவ், மேரி கோம், கே.பராசரன், கோபி சுரேஷ், சுப்பிரமணியன் சுவாமி, கேடிஎஸ் துளசி என மொத்தம் 12 பேர், மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக உள்ளனர்.
    அமைச்சருக்கு எதிராகப் போர்க்கொடி: இதனிடையே, மாணவி ஒருவரின் பாலியல் புகாரின் உண்மைத் தன்மை குறித்து சந்தேகம் எழுப்பிய ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியாவை மத்திய அரசு உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் காகசான் பர்வீன், மாநிலங்களவையில் வலியுறுத்தினார்.
    அதற்குப் பதிலளித்த மத்திய இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, ''அமைச்சர் அப்படி கூறியிருந்தால், அது கண்டிக்கத்தக்கது; இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில அரசுக்கு மாநிலங்களவை தெரிவிக்கும்'' என்றார்.
    காலாவதி மருந்து விற்பனை புகார்: ''மருந்துக் கடைகளில் காலாவதியான, போலியான, தரம் குறைந்த மருந்துகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன; குறிப்பாக, கிராமப்புறங்களில் விற்பனை செய்யப்படும் 90 சதவீத மருந்துகள் காலாவதியானவை'' என்று சமாஜவாதி உறுப்பினர் நரேஷ் அகர்வால், மாநிலங்களவையில் கவலை தெரிவித்தார்.
    அதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, ''மருந்துகளின் தரத்தை பரிசோதிக்கவும், தரமற்ற மருந்து விற்பனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன'' என்றார்.
    வெளிநாட்டவர் மீதான தாக்குதல்: உத்தரப் பிரதேசத்தில் ஆப்பிரிக்க மாணவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவையில் உறுதியளித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai