சுடச்சுட

  

  நெடுஞ்சாலை மதுக்கடைகளை அகற்ற அவகாசம் தர முடியாது:உச்ச நீதிமன்றம் கறார்! 

  Published on : 31st March 2017 05:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tasmac

   

  புதுதில்லி: தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகளை அகற்ற அவகாசம் தர முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்து தீர்ப்பளித்துள்ளது.

  தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் சுற்று வட்டாரத்துக்குக் குறையாமல் மதுபானக் கடைகள் தள்ளியிருக்க வேண்டும் என கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநில அரசுகள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியது.

  இது தொடர்பாக தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநில அரசுகள், சில மதுபான ஆலை நிறுவனங்கள் ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தன. அவற்றை புதன், வியாழன் ஆகிய நாள்களில் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் டி.ஓய். சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

  இரண்டாம் நாள் விசாரணையின் போது, மதுபான நிறுவனங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவன், 'எந்தச் சட்டத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை அளித்தது? மதுபான உரிமம் தொடர்பாக மாநிலங்கள் பல்வேறு தனித் தனி சட்டங்களை இயற்றியுள்ளன. மாநிலத்தின் நில அமைப்பைக் கவனத்தில் கொள்ளாமல், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்றார். இதைத் தொடர்ந்து, மூத்த வழக்குரைஞர்கள் சி.எஸ். வைத்தியநாதன், கே.கே. வேணுகோபால் ஆகியோர் வாதங்களை முன் வைத்தனர்.

  தமிழக அரசின் 'டாஸ்மாக்' நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால், 'தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மதுபானக் கடைகள் நகராட்சிகளில் உள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவால் அந்தக் கடைகளை அகற்ற வேண்டியுள்ளது' என்று முறையிட்டார்.

  இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி, 'பெரு நகரங்கள் ஒவ்வொன்றையும் மற்றொன்றுடன் ஒப்பிட முடியாது. எனவே, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பில் இருந்து மாநில நெடுஞ்சாலைகள், நகராட்சிகள் ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இது தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்ய மாநிலங்களுக்கு 10 நாள்கள் அவகாசம் அளிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் ஏற்கெனவே மாநிலத்தின் நிதி நிலை மோசமடைந்துள்ளது' என்றார்.

  இதையடுத்து, மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் முன்வைத்த வாதத்தில் 'இந்த விவகாரத்தில் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்' என்று யோசனை தெரிவித்தார்.

  இதைத் தொடர்ந்து, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளவரும் இந்த விவகாரத்தில் ஆரம்பகால புகார்தாரருமான வழக்குரைஞர் கே. பாலு சார்பில் மூத்த வழக்குரைஞர் தனஞ்செய் முன் வைத்த வாதத்தில், 'தமிழகத்தில் மதுபான விற்பனையை அரசே ஏற்று நடத்துவதால் உரிமம், காலக்கெடு தொடர்பான பிரச்னை எழ வாய்ப்பில்லை. மதுபான விற்பனையால் வரும் வருவாயை விட மணல் குவாரி போன்றவற்றால் இரு மடங்கு வருவாயை மாநில அரசால் ஈட்ட முடியும்' என்றார்.

  அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தங்கள் உத்தரவை ஒத்திவைப்பதாகக் குறிப்பிட்டனர்.

  இந்நிலையில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகளை அகற்ற அவகாசம் தர முடியாது என்று தெரிவிக்கபட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டைப்பொறுத்த வரை அரசே மது விற்பனையினை ஏற்று நடத்துவதால் உடனே மதுக்கடைகள் அகற்றப்பட்டாக வேண்டும் என்று அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai