சுடச்சுட

    

    மத்தியில் ஆளும் பாஜக அரசு திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக பழிவாங்கும் கொள்கையை கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டி கொல்கத்தாவில் அக்கட்சி சார்பில் வியாழக்கிழமை கண்டனப் பேரணி நடத்தப்பட்டது.
    இதில், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்களும், மகளிரணியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரும் பங்கேற்றனர். மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பிய அவர்கள், பிரதமர் நரேந்திர மோடியைக் கண்டிக்கும் வாசகம் அடங்கிய பதாகைகளையும் கையில் ஏந்திச் சென்றனர்.
    மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து மொத்தம் 3 பேரணிகளை நடத்த இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் அறிவித்தது. மார்ச் 31, ஏப்ரல் 3-ஆம் தேதிகளிலும் இதுபோன்ற கண்டனப் பேரணி நடை
    பெறவுள்ளது.
    பேரணியில் பங்கேற்ற திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் சந்திரிமா பட்டாச்சார்யா கூறியதாவது: உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெற்றதற்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, சிபிஐ உள்ளிட்ட மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை எங்கள் கட்சித் தலைவர்கள் மீது மத்திய அரசு ஏவிவிட்டுள்ளது.
    இடதுசாரிக் கட்சிகளின் ஆட்சிக் காலத்தில்தான் மேற்கு வங்கத்தில் நிதி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. ஆனால், நிதி நிறுவன மோசடி வழக்கில் இடதுசாரிக் கட்சித் தலைவர்களில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. தங்களது கொள்கைகளை கடுமையாக எதிர்க்கும் எதிர்க்கட்சிகளை முடக்கும் நோக்கில் மத்திய அரசு பழிவாங்கும் கொள்கையுடன் செயல்பட்டு வருகிறது.
    திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் சுதீப் பானர்ஜி, கடந்த 3 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நோய்வாய்பட்டுள்ள அவரை வேண்டுமென்றே கொடுமைக்கு உள்ளாக்குகின்றனர். சிபிஐ, அமலாக்கத் துறையை வைத்து மிரட்டுவதால் திரிணமூல் காங்கிரஸை பணியவைத்துவிட முடியாது.
    மக்கள் நலனுக்காக எங்கள் கட்சி எப்போதும் பணியாற்றும். பாஜகவினர் எந்த அளவுக்கு பழிவாங்கும் போக்கில் சென்றாலும், அதனை முறியடிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai