சுடச்சுட

    

    பிரதமரை சந்தித்துப் பேசினாலும் கடன்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்: ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் திட்டவட்டம்

    Published on : 31st March 2017 11:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    farmer

    விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன்.

    பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினாலும், விவசாயக் கடன்களை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும் வரையிலும் தில்லியில் மேற்கொண்டுள்ள காலவரையற்ற போராட்டம் தொடரும் என தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி. அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
    விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்; அனைத்து நதிகளை நீர்வழிப் பயணத் திட்டத்தின் மூலம் இணைக்க வேண்டும்; விவசாய விளைபொருள்களுக்கு லாபகர விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் தேசிய - தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த 14-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு கூறுகையில், 'பிரதமர் நரேந்திர மோடி எங்களிடம் பேசினாலும் விவசாயக் கடன்களை ரத்து செய்யும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் வரையிலும் போராட்டம் தொடரும்' என்றார்.
    இதனிடையே, தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, இடதுசாரிக் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, விவசாயிகள் சங்க அமைப்புகள் உள்ளிட்டவற்றின் தலைவர்கள் தில்லி ஜந்தர் மந்தருக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
    இந்நிலையில், 17-ஆவது நாளாக வியாழக்கிழமையும் நீடித்த விவசாயிகளின் போராட்டத்துக்கு 'நாம் தமிழர்' கட்சித் தலைவர் சீமான் தலைமையிலான அக்கட்சியின் சில நிர்வாகிகள் நேரில் ஆதரவு தெரிவித்தனர்.
    அப்போது விவசாயிகளிடையே சீமான் பேசியதாவது: நாட்டில் பிற தொழில் செய்வோர், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு விலையை நிர்ணயிக்க உரிமை உண்டு. ஆனால், விவசாய விளைபொருள்களுக்கு விவசாயிகள் விலை நிர்ணயம் செய்யாத அவலம் நிலவுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் கடலில் கலக்கும் ஆற்று நீரை சேமிக்க உருப்படியான திட்டம் இல்லை. பாரம்பரிய விதைகளுக்குக்கூட 'மான்சான்டோ' நிறுவனத்தை சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தமிழகத்தில் தயாரிக்கப்படும் லட்சக்கணக்கான மகிழுந்துகளால் (கார்) லட்சக்கணக்கான லிட்டர் மழை நீர் வீணாகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி அளிக்கும் அரசு, விவசாயக் கடன் தள்ளுபடி கோரிக்கையை ஏற்க மறுப்பது ஏன்?' என்றார் அவர்.
    இந்தப் போராட்டத்துக்கு மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஹைதர் அலி வியாழக்கிழமை நேரில் ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், 'தமிழகத்தில் விவசாயிகளின் இறப்பை அடுத்து, சில குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிமுகவை சேர்ந்த மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை 'தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை' என மக்களவையில் முரணாகப் பேசுகிறார். இந்த விவகாரத்தை வெறும் விவசாயப் பிரச்னையாகப் பார்க்காமல், ஒட்டு மொத்த தமிழர் பிரச்னையாகப் பார்க்க வேண்டும்' என்றார்.
    இதேபோல, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன், தமிழ் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஒ.ஏ. நாராயணசாமி, சமூக சேவகர் சுவாமி அக்னிவேஷ் உள்ளிட்டோரும் நேரில் ஆதரவு தெரிவித்தனர்.
    ராகுல் காந்தி மௌனம்? திருநாவுக்கரசர் குழப்பம்
    தில்லியில் போராடும் விவசாயிகளை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை சந்திக்கவில்லை. சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ராகுல் காந்தியுடன் வியாழக்கிழமை சென்று விவசாயிகளை சந்திக்கவுள்ளேன்' என்றார்.
    இதன்படி, தில்லிக்கு வந்த திருநாவுக்கரசர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் வியாழக்கிழமை மாலையில் சந்தித்தார். ஆனால், ஜந்தர் மந்தருக்கு வருவது பற்றி ராகுல் தரப்பில் எவ்வித உறுதியும் அளிக்கப்படவில்லை. இதனால், திருநாவுக்கரசர் குழப்பம் அடைந்து காங்கிரஸ் தலைமையகத்துக்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் விடுக்கும் கோரிக்கை, தமிழகம் மட்டுமின்றி காங்கிரஸ் ஆளும் கர்நாடகத்துடன் தொடர்புடையது. இதனால், நேரில் வந்து தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் அது கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ராகுலிடம் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும், விவசாயிகள் - ராகுல் சந்திப்புக்கு தில்லியில் முகாமிட்டு திருநாவுக்கரசர் முயற்சி செய்து வருவதாகத் தெரிகிறது.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai