பெண் குழந்தை பாதுகாப்பு நிதியை முறையாக பயன்படுத்தாத பஞ்சாப் அரசு: சிஏஜி அறிக்கையில் தகவல்
By DIN | Published on : 31st March 2017 01:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
'பெண் குழந்தையைப் பாதுகாப்போம்' திட்டத்துக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை பஞ்சாப் மாநில அரசு முறையாகப் பயன்படுத்தவில்லை என்று சிஏஜி (கணக்குத் தணிக்கை அமைப்பு) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் மற்றும் செலவின விவரங்கள் தொடர்பாக மாநில வாரியாக ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட மாநில சட்டப்பேரவைகளில் சிஏஜி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.
அதன் அடிப்படையில் பஞ்சாப் மாநிலத்தின் 2014-16 நிதியாண்டுக்கான வருவாய்-செலவின விவரங்கள் குறித்து அந்த மாநில சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டை பஞ்சாப் அரசு முறையாகப் பயன்படுத்தவில்லை என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 'பெண் குழந்தையைப் பாதுகாப்போம்' திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு அமல்படுத்தியது. இதனை பஞ்சாபில் அமலாக்க ரூ.6.36 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்தத் தொகையை மாநில அரசு சரிவரப் பயன்படுத்தவில்லை. கடந்த இரு ஆண்டுகளில் பெண் குழந்தை பாதுகாப்புக்காக ரூ.92 லட்சம் மட்டுமே பஞ்சாப் அரசு செலவிட்டுள்ளது.
மாநிலத்தின் பாலின சராசரியில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இருந்தபோதிலும், அந்தத் திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்த மாநில அரசு முன்வரவில்லை. இதன் காரணமாக பஞ்சாபின் 11 மாவட்டங்களில் 'பெண் குழந்தையைப் பாதுகாப்போம்' திட்டம் முழுமையாகச் சென்றடையவில்லை. அவற்றில் இரு மாவட்டங்களில் அந்தத் திட்டத்தை தொடங்கவே இல்லை என்று சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.