ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து 2 நாள்கள் நிறுத்தப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கியது.
இது தொடர்பாக காவல் துறையினர் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரின் நிரந்தர குடியிருப்பு வாசிகளுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 35ஏ'-வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் போராட்டம் நீடித்ததையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், நிலைமை சீரானதைத் தொடர்ந்து 454 பக்தர்களைக் கொண்ட 36-ஆவது குழு பகவதி நகர் முகாமிலிருந்து செவ்வாய்க்கிழமை அமர்நாத் புறப்பட்டுச் சென்றது. இக்குழுவில் 391 ஆண்களும், 93 பெண்களும் அடங்குவர். 230 பக்தர்கள் குறைந்த தூரப் பாதையான பல்தால் பாதை வழியாகவும், 194 பக்தர்கள் அதிக தூரப் பாதையான பஹல்காம் பாதை வழியாகவும் பயணிக்க உள்ளனர்.
பக்தர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
ஆண்டுதோறும் 60 நாள்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் அமர்நாத் யாத்திரை, இந்த ஆண்டு கடந்த ஜூன் 28-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 2,74,118 பக்தர்கள் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இந்த ஆண்டுக்கான யாத்திரை வரும் 26-ஆம் தேதியுடன் நிறைவடைய இருப்பது குறிப்பிடத்தக்கது.